இத்தாலியில் நடைபெறும் உலக கணித மாநாட்டில் பங்கேற்கிறார்
மதுரை, ஜூலை 26- மதுரையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சிறப்பாக நடத்தி வரும் சி.இ.ஓ.ஏ. கல்விக் குழுமத்தின் நிறுவனர் முனைவர் இராசா கிளைமாக்சு , ஒரு சிறந்த கல்வியாளர். ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரியாகிய இவர், தமிழில் புலமை பெற்றவர். தற்போது இவர் கணிதத்தில், அதிலும் குறிப்பாக வடிவியலில் (Geometry) பல புதிய தேற்றங்களைக் கண்டுபிடித்து உலக அளவில் கணித அறிஞர்களிடையே புகழ் பெற்று வருகிறார். இதுவரை பல இந்திய மற்றும் பன்னாட்டு மாநாடுகளில் (கோவா, தில்லி, கொச்சின், புனே, திருப்பதி மற்றும் பிலிப்பைன்ஸ்) பங்கு பெற்று பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். உலகக் கணிதக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (AIMER) என்ற அமைப்பு, இந்த ஆண்டு “ஏகலைவன்” என்னும் விருதினை வழங்கி, இவரைப் பெருமைப்படுத்தியது. வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில், இத்தாலியில் நடைபெறும் உலகக் கணித மாநாட்டிற்கு இவர் அழைக்கப்பட்டுள்ளார். அம்மாநாட்டில், தாம் கண்டுபிடித்த “பனிரெண்டு புள்ளி வட்டம்” என்ற புதிய வடிவியல் தேற்றத்தை அறிஞர்கள் நடுவில் அரங்கேற்றுவதற்காக அழைக்கப்பட்டுள்ளார். இந்தப் புதிய தேற்றம் பற்றி அவர் தீக்கதிர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 1822 ஆம் ஆண்டில், ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோயர்பாக் என்பவர், ஒரு முக்கோணத்தில் உள்ள 6 முக்கியப் புள்ளிகள் வழியாக ஒரு வட்டம் செல்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். அதற்கு “6 புள்ளி வட்டம்” என்று பெயரிட்டார். அதன்பின் சுமார் 10 ஆண்டுகள் கழித்து, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர்லி டெர்க்கெம் என்பவர், மேற்கூறிய “6 புள்ளி வட்டம்”, ஒரு முக்கோணத்தில் மேலும் கூடுதலாக 3 முக்கியப் புள்ளிகள் வழியாகச் செல்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். எனவே அதற்கு “9 புள்ளி வட்டம்” என்று பெயரிட்டார். தற்போது சுமார் 200 ஆண்டுகள் கழித்து, அந்த வட்டம், ஒரு முக்கோணத்தில் மேலும் கூடுதலாக 3 புள்ளிகள் வழியாகச் செல்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவ்வட்டத்திற்கு “12 புள்ளி வட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பை இத்தாலியில் நடைபெறும் கணித மாநாட்டில் உலக கணிதமேதைகள் மத்தியில் எடுத்துரைக்க உள்ளேன் என்று தெரிவித்தார். கல்வியாளர் இராசா கிளைமாக்சின் புதிய கணித தேற்றம் கண்டுபிடிப்பை ஆசிரியர்களும் கல்வியாளர்களும் பாராட்டியுள்ளனர். தீக்கதிர் சார்பிலும் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.