திருத்துறைப்பூண்டி சிபிஎம் அலுவலகத்தில் நடந்த காதல் திருமணம்
திருத்துறைப்பூண்டி, செப். 5- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர். மணமகன் கள்ளக்குறிச்சியையும், மணமகள் கிருஷ்ணகிரியையும் சேர்ந்த, ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக மணமகன் வீட்டில் எதிர்ப்புகள் இருந்ததால், அவர்களுக்கு சட்டப்படியாக பதிவு செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜோதிபாசு, கே.ஜி. ரகுராமன் ஆகியோர் பங்கேற்றனர். விதொச மாவட்டத் தலைவர் பிரகாஷ், ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ், நகரச் செயலாளர் கே. கோபு மற்றும் கட்சி உறுப்பினர்கள் இந்த காதல் திருமணத்தை நடத்தி வைத்தனர்.