எல்ஐசி முகவர்கள் ஆர்பாட்டம்
கும்பகோணம், ஆக. 22- அக்டோபர் 24 அன்று யோகஷேமாவில் நடந்த சங்க பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மெடிக்ளைம் வசதியை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்ட முகவர்களுக்கும் குழு காப்பீட்டுப் பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்திநகர் எல்ஐசி அலுவலகம் முன்பு முகவர்கள் சங்கம் சார்பில் உணவு இடைவேளை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் கிளை துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் சங்கர், துணைச் செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி கோட்டத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், எல்ஐசி ஊழியர் சங்க கோட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றினர். கிளைப் பொருளாளர் முருகன் நன்றி தெரிவித்தார்.