குடவாசல் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
திருவாரூர், ஆக 1- குடவாசல் அருகே உள்ள செல்லூரில் கட்டி முடிக்கப்பட்ட குடவாசல் அறிவியல் கலை அறிவியல் கல்லூரி கட்டிடத்தை உடனடியாக திறந்திட கோரி வகுப்பை புறக்கணித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள ஓகை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், குடவாசல் அரசு கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக துவக்கப்பட்டு கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்திய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பு சார்பாக, கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டக் கோரி போராட்டங்கள் நடத்திய நிலையில், குடவாசல் அருகே உள்ள செல்லூர் ஊராட்சி கிராமத்தில், குடவாசல் அரசு கல்லூரி கட்டிடம் பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளன. இந்த நிலையில் புதிய கல்லூரி கட்டடத்தை உடனே செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என கல்லூரி முதல்வரிடம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் மாணவர்கள் சார்பாக, கடந்த ஜூலை 16 ஆம் தேதி கோரிக்கையை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததால் இக்கோரிக்கை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை காலை இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, குடவாசல் அரசு கலைக்கல்லூரியின் இந்திய மாணவர் சங்க கிளைத்தலைவர் மு.கதிரவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் க.கலைச்செல்வன் கோரிக்கையை விளக்கி உரையாற்றினார். கல்லூரி கிளைச் செயலாளர் ர. சிவனேஷ், மாவட்ட துணைச் செயலாளர் ம. இனியா, கிளை நிர்வாகி நவீன் மற்றும் பாப்நிஷா உட்பட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.