tamilnadu

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன்  துணைத் தலைவர் தேர்தலை இன்று நடத்துக! உயர்நீதிமன்றம் உத்தரவு    

மதுரை, மார்ச் 3-  கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பதவிக்கு இன்று (மார்ச் 4) தேர்தல் நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த முத்துமாரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் “கடந்த ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் 15-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இதை தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு கடந்த ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடத்தபட்ட போது, தேர்தல் அதிகாரிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால்,தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதையடுத்து ஜனவரி 30 அன்று தலைவர் பதவிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு,தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது. ஆனால் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து துணைத்தலைவர் பதவிக்கு மார்ச் 4 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.தேர்தல் நடத்தும் 7 நாட்கள் முன்பு அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால் அறிவிப்புக்கு எவ்வித விதியையும் பின்பற்றவில்லை. எனவே மார்ச் 4 ஆம் தேதி நடக்க இருக்கும் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்தும், தேர்தல் விதிப்படி துணைத்தலைவர் தேர்தல் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சரவணன் அமர்வு முன்பு செவ்வாயன்று நடைபெற்றது.அப்போது, மார்ச் 4 ஆம் தேதி கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

;