tamilnadu

img

மேலும் வலிமையோடு கேரளம் - கோடியேறி பாலகிருஷ்ணன்

1956 நவம்பர் 1 அன்று தமிழ்நாடும் கேரளமும் இரண்டு மாநிலங்களாக உருவாயின. அதற்கு முந்தைய காலம் ஒருவருக்கொருவர் நட்புறவுடனான வாழ்க்கையும் கலாச்சாரமும் நிலவிய காலமாகும். முன்பு மலபார் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவும் கன்னியாகுமரி கேரளத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தன. கேரளத்தின் பல்வேறு தோழர்கள் தமிழ்நாடு கட்சியுடன் இணைந்து முந்தைய காலம் முதலே தலைமைப் பொறுப்பிலிருந்து செயல்பட்டு வந்துள்ளார்கள். இவ்வாறாக இரு மாநிலங்களும் இணைந்து செயல்பட்டு கலாச்சாரம் மற்றும் அரசியல் ரீதியாக முன்னேறி வந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாநாடு அங்கு நிலவும் அரசியல் மற்றும் ஸ்தாபன ரீதியிலான விசயங்கள் குறித்து விமர்சனம் மற்றும் சுயவிமர்சனங்களுடன் மதிப்பீடு செய்து மேலும் முன்னோக்கிச் செல்வதற்கான தீர்மானங்களை எடுத்திருக்கும் என்பதில் எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை.

அவற்றை பலனளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு இயலட்டும் என வாழ்த்துகிறேன். கேரள மாநிலக் கட்சியைப் பொறுத்தமட்டில் அரசியல் ரீதியாகவும் ஸ்தாபன ரீதியாகவும் பெருமக்கள் ஆதரவோடு கடந்த அகில இந்திய மாநாட்டிற்குப் பிந்தைய காலமென்பது முன்னேற்றத்தை நோக்கியதாக அமைந்தது. வரலாற்றில் முதல் முறையாக கட்சி தலைமையேற்கின்ற இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு தொடர்ந்து ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்ற பெருமைமிகு சாதனையும் இந்தக் காலத்தில் உண்டானது. ஒக்கிப் புயல், பெருவெள்ளம், கோவிட் 19 ஆகியவை ஏற்படுத்திய நெருக்கடிகளை எதிர்கொண்டு இத்தகையதொரு சாதனையைப் படைக்க முடிந்தது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.  மதமோதல்கள் இல்லாத மாநிலமாக இடதுசாரி ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்திக் கொண்டு உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிரான மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து கேரளத்தில் கட்சி செயல்பட்டது. மத்திய ஏஜெண்டுகளைக் களத்தில் இறக்கி மாநில அரசின் சாதனைகளை இல்லாமல் செய்யும் முயற்சிகளை முறியடித்து முன்னேறிச் செல்வதற்கு இந்த காலத்தில் நம்மால் முடிந்தது. முன்பு மாநிலத்தில் பிஜேபி-க்குக் கிடைத்திருந்த ஒரு சட்டமன்ற இடத்தையும் கடந்த தேர்தலில் அவர்கள் இழந்த சூழலும் இந்த காலத்தில் உண்டானது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலிலும் அவர்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்த காட்சியை கேரளம் கண்டது.

இந்த காலகட்டத்தில் நாடு முழுவதிலும் மதப் பிரிவினைவாதத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்ற போதிலும் மதமோதல்கள் இல்லாத மாநிலமாக கேரளத்தை உறுதியுடன் நிலைநிறுத்துவதற்கு இந்தக் காலத்தில் நம்மால் முடிந்தது.  தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொரு ஆண்டும் பரிசீலித்து எந்தளவிற்கு நிறைவேற்றியுள்ளோம் என்பது குறித்து அரசின் மதிப்பீட்டு அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகின்ற புதிய ஜனநாயகக் கலாச்சாரத்திற்கு வடிவம் கொடுத்தோம். ஐந்து வருட ஆட்சி நிறைவுபெறும் போது மக்களுக்கு அளித்த 600 வாக்குறுதிகளில் 580 வாக்குறுதிகளை நிறைவேற்றி ஜனநாயகக் கலாச்சாரத்திற்கு ஒரு புதுத் தோற்றத்தை வழங்குவதற்கும் இந்தக் காலத்தில் நம்மால் முடிந்தது. மாநில அரசுக்கு தொடர் ஆட்சி கிடைத்த கட்டத்தில் சோசலிச நாடுகளின் அனுபவங்களையும் இந்தியாவின் இடதுசாரி அரசுகளின் செயல்பாடுகளையும் உள்வாங்கிக் கொண்டு ஒரு புதிய பாதையை அமைப்பதற்கான திட்டங்களையும் முன்வைக்க முடிந்தது. இதன் அடிப்படையில் ’மாநில அரசும் நிகழ்காலக் கடமைகளும்’ என்ற திட்டத்தைக் கட்சியின் மாநிலக்குழு அங்கீகரித்தது. நாடாளுமன்ற விவகாரங்களில் கட்சி ஆற்றவேண்டிய கடமை என்னவென்பதை இது தெளிவாக்கியது. மாநிலத்தில் தொடர் ஆட்சி வாய்ப்பைப் பெற்ற கட்சியின் தலைமையிலான அரசு எவ்வாறு செயல்படவேண்டும் என்பது சம்பந்தமான கண்ணோட்டத்தை உருவாக்குவதற்கும் கட்சியால் முடிந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையின் அடிப்படை நிலைபாடுகளில் நின்று அடுத்த 25 ஆண்டு கேரளத்தை உருவாக்குவது சம்பந்தமான கண்ணோட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய கேரளத்திற்கான கட்சியின் கண்ணோட்டம் என்ற திட்ட அறிக்கையை மாநில மாநாட்டில் விரிவாக விவாதித்து அது அங்கீகரிக்கப்பட்டது.  கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன ரீதியாக வளர்ச்சிதான் இத்தகைய சாதனைகளுக்கு அடிப்படையாக அமைந்தது. கடந்த மாநாடு நடந்தபோது மாநிலத்தில் 4,63,472 பேர் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர்.

தற்போது மாநாடு நடைபெறும் வேளையில் அந்த எண்ணிக்கை 5,24,221 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாநாட்டின் போது 32,967 இருந்த கட்சிக்கிளைகளின் எண்ணிக்கை தற்போது 36,649 ஆகும். 2,193 என்ற எண்ணிக்கையிலிருந்த பகுதிக்குழுக்களின் எண்ணிக்கை 2,314 அதிகரித்துள்ளது. இந்த வகையில் ஸ்தாபன ரீதியான முன்னேற்றத்தை அடைவதற்கும் இந்த கால அளவில் நம்மால் முடிந்தது என்பது பெருமைப்படத்தக்க விசயமாகும்.  பெண்களின் பங்களிப்பு கேரள மக்கள் தொகையில் பாதிக்குமேல் உள்ள பெண்களின் பங்களிப்பு நமது கட்சி ஸ்தாபனத்தில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு உயர்ந்து வரவில்லை என்ற பிரச்சனை நாம் எதிர்கொண்டதுதான். ஒரு கட்சி கிளையில் இரண்டு பெண்களாவது உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்ற நிலைபாட்டை வலுவாக நடைமுறை ப்படுத்துவதற்கு இந்த காலகட்டத்தில் நம்மால் முடிந்துள்ளது. அனைத்துக் கிளைகளிலும் அது சாத்தியமாகவில்லை என்றாலும் மொத்தக் கிளைகளைவிட இரண்டு மடங்கிற்கும் மேலாக பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு நம்மால் முடிந்துள்ளது. கிளைச் செயலாளர்களாக 1,991 பெண்கள் மாநிலம் முழுவதும் உயர்ந்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒரு செய்தியாகும். கேரளத்தில் இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரிய பிரளயத்தை நாம் எதிர்கொண்டோம். பிரளயத்திலிருந்து மீண்டுவருவதற்கு கட்சியும் வர்க்க வெகுஜன அமைப்புகளும் களத்தில் இறங்கி தீவிரமாகச் செயல்பட்டன. மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுடன் கட்சியும் சேர்ந்து நடத்திய மீட்புப் பணிகளை கேரள மக்கள் காலகாலத்திற்கும் நினைவில் கொள்வார்கள். மக்களின் பிரச்சனைகளில் அவர்களுடன் சேர்ந்து செயல்படுவது என்ற கம்யூனிஸ்ட் கண்ணோட்டத்தை அடிபிசகாமல் நடைமுறைப்படுத்துவதற்கான தலையீடுகளும் இந்த கால கட்டத்தில் நடத்த முடிந்தது என்பதும் பெருமையான விசயமாகும். கோவிட் காலம் என்பது சமூகத்துடன் இணைந்து செயல்படுவதை முற்றிலும் முடக்கிப்போட்ட ஒரு காலமாக இருந்தது. மக்கள் பொதுவெளியில் கூடுவதற்கும் ஒன்றிணைவதற்கும் இயலாத சூழல் நிலவியது. இத்தகைய சூழலை எதிர்கொண்டு கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கு அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாம் நடத்திய செயல்பாடுகள் இந்த காலகட்டத்தில் புதிய அனுபவமாக இருந்தது. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் நவீன ஊடகங்களின் வாயிலாக ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் முறையை வளர்த்தெடுப்பதற்கும்

இந்த காலகட்டத்தில் முடிந்தது. கட்சியின் கருத்து ரீதியிலான பிரச்சாரத்திற்கும் கட்சிக் கல்விக்கும் நவீன ஊடகங்களைப் பயன்படுத்திக் கொண்டு புதிய ஒரு இணைப்பு முறையை வளர்த்தெடுப்பதற்கும் மாநிலத்தில் முடிந்தது. டிஜிட்டல் ஏற்பாடுகளால் மட்டுமே கல்வி சாத்தியமாகும் என்ற நிலை மாநிலத்தில் அதிகரித்து வந்தது. உண்மையிலேயே அத்தகைய வாய்ப்புகள் இல்லாத ஏழைகளைப் பொறுத்தவரையில் இது முக்கியமான ஒரு பிரச்சனையாக எழுந்தது. டிஜிட்டல் பாகுபாடு உருவாக்கும் இத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் நடத்திய தலையீடுகள் முக்கியத்துவம் வாய்ந்தனவாக இருந்தன. கிராமப்புற நூலகங்கள் மற்றும் சங்கக் கட்டிடங்களை வகுப்பறைகளாகப் பயன்படுத்தி ஏழைகளுக்கு கல்வியைக் கொண்டு சேர்க்கும் விதத்தில் பெரிய அளவிலான திட்டங்களைத் தீட்டுவதற்கு இந்தக் காலத்தில் கட்சியால் இயன்றது என்பதும் பெருமைக்குரிய விசயமாகும்.  காலத்திற்கேற்ற மாற்றங்களைக் கருத்தில்கொண்டு கட்சியை வலுப்படுத்துவோம் என்ற ஒரே லட்சியத்துடன் தோழர்கள் அனைவரும் ஒன்றுமையுடன் செயல்பட்ட மாநாடுகள் கேரளம் முழுவதும் நடைபெற்று முடிந்தது. கட்சி மாநாடுகளை நாம் தீர்மானிக்கும் போதே அவதூறுச் செய்திகளைத் தயார்ப் படுத்துவதென்பது கேரள வலதுசாரி ஊடகங்களின் வழக்கமான வேலையாகும். அதற்குக்கூட வாய்ப்பளிக்காத விதத்தில் முன்னேறிச் செல்வதற்கு நம்மால் முடிந்தது.

 வளர்ச்சி, மக்கள் முன்னேற்ற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம்தான் மாநிலத்தில் இடதுசாரி இயக்கத்திற்கு தொடர்ச்சியான ஆட்சி கிடைத்தது என்ற உண்மை வலதுசாரி சக்திகளுக்குத் தெரியும். அதனால்தான் அரசின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் தடைபோடுவது என்ற நிகழ்ச்சி நிரலுடன் வலதுசாரி சக்திகள் செயல்படுகின்றன.  இத்தகைய செயல்பாடுகளை மக்கள் மன்றத்தில் வெளிச்சம்போட்டுக் காட்டுவதற்கும் மக்கள் நலத் திட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் மாநாடு திட்டம் வகுத்துள்ளது.  அரசியல் மற்றும் ஸ்தாபன ரீதியாகவும் மற்றும் அரசு செயல்பாடுகளிலும் அதிக அக்கறையுடன் முன்னோக்கிச் சென்ற ஒரு காலகட்டத்தை கட்சி கடந்து வந்துள்ளது. இருபத்தி மூன்றாவது அகில இந்திய மாநாடு எடுக்கும் தீர்மானங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான வலுவான இயக்கமாக கேரள கட்சி மாறியுள்ளது. அனைத்துத் தவறுகளையும் திருத்தி புதிய காலகட்டத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கும் முன்னேறிச் செல்வதற்குமான வலிமையை நடந்து முடிந்த கட்சி மாநாடுகள் வழங்கியுள்ளன. நமது நாடு மிகக் கொடூரமான நெருக்கடியை எதிர்கொள்கின்ற இந்த காலகட்டத்தில்தான் இருபத்து மூன்றாவது அகில இந்திய மாநாடு கேரளாவில் நடைபெறுகிறது. அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் நாம் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்வோம்.

தமிழாக்கம்: மு.சங்கரநயினார்