சென்னை, ஜன.19- ஒன்றிய பாஜக அரசால் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்திகளை சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்தியாவின் குடியரசு தின விழாவில் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் மாநில அரசுகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பது வழக்கமான ஒன்றாகும். பாஜக ஒன்றிய அரசு இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுத்துள்ளது. தமிழக அலங்கார ஊர்திகளில், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று சுதேசி கப்பல் கம்பெனி நடத்தி தனது சொத்துகளை எல்லாம் இழந்து ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடியதால் இரட்டை தீவாந்திர தண்டனை பெற்ற வ.உ.சி, மகாகவி பாரதியார் மற்றும் பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்து போராடிய வீரத்தாய் வேலுநாச்சியார் போன்றவர்களுடைய உருவங்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஒன்றிய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் அதையும் ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ள ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியதாகும். தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கத் தவறிய ஒன்றிய அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் எனவும், இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல முக்கிய நகரங்களுக்கு மக்களின் பார்வைக்காக இந்த ஊர்திகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாவட்டங்களில் இந்த அலங்கார ஊர்திகளுக்கு கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமெனவும் கட்சி அணிகளை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.