கல்வி நிலையங்களில் போதைப் பொருள் பழக்கத்தை ஒழிக்க கவனம் செலுத்த வேண்டும் நீதிபதி சுரேஷ்குமார் அறிவுரை
புதுக்கோட்டை, அக். 13- போதைப் பொருள் பழக்கத்தை ஒழிக்க கல்வி நிலையங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான சுரேஷ்குமார் தெரிவித்தார். புதுக்கோட்டையில், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அடிப்படைத் தகவல் மற்றும் வெளிப்படைத் தன்மை முன்முனைவுக்கான நீதி விழிப்புணர்வு திட்டம் 2025-ன் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடெங்கும் போதைப் பொருள், எல்லாப் பகுதிகளிலும் பரவியிருக்கிறது. எல்லா இடங்களிலும் கவனம் செலுத்த முடியாது என்றாலும், சிறைகள், பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கத்தை ஒழிப்பது எப்படி என கவனம் செலுத்த வேண்டும். முழுமையாகத் தடுக்க வேண்டும். இளைஞர்கள் சமூகத்தில் தங்களின் சேவை, பங்களிப்பு என்ன என எண்ணிச் செயல்பட்டால், சமூகம் உங்களைப் பாராட்டும். உங்களுக்கு நிறைய பொறுப்பு கள் இருக்கின்றன. காலத்தை நீங்கள் விரயம் செய்யாதீர்கள். நீங்கள் இந்த நாட்டின் குடிமகன்கள். இந்தச் சமூகத்தில் அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ்வதற்கு முழு தகுதி படைத்தவர்கள். அந்த அடிப்படையில் உங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்’’ என்றார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர்களும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுமான என். செந்தில்குமார், தண்டபாணி, ஜெகதீஷ் சந்திரா, புகழேந்தி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். மாவட்ட ஆட்சியர் மு. அருணா, காவல் கண்கா ணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாநகராட்சி ஆணையர் த. நாரா யணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் பால கிருஷ்ணன் வரவேற்க, மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழு தலைவர் கே. பூரண ஜெய ஆனந்த் நன்றி கூறினார்.
