tamilnadu

img

ஜப்பான் பேனா - உதயசங்கர்

ஜப்பான் பேனா

மறுபடியும் வகுப்பில் திருட்டு. இன்று ராமின் பேனாவைக் காணவில்லை. ராமின் மாமா ஜப்பான் போய்விட்டு நேற்று மாலை வந்தார். வரும்போது ராமுவுக்காக அந்தப் பேனாவை வாங்கி வந்திருந்தார். பேனா அவ்வளவு அழகாக இருந்தது. வழுவழு என்று பட்டுத்துணியைக் கையில்  தொட்டமாதிரி. அத்தனை பளபளப்பு. ராமு வின் முகத்தில் அத்தனை ஆனந்தம். சிரிப்பு.  அந்தப் பேனாவைக் கையிலே வைத்துக் கொண்டே சாப்பிட்டான். தூங்கும்போது அந்தப் பேனாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே தூங்கினான். அந்தப் பேனாவைப் பள்ளிக்கூடத் துக்குக் கொண்டுபோகக்கூடாது என்று அம்மா சொன்னார். ஆனால் ராமுவுக்கு நண்பர்களிடம் அந்தப் பேனாவைக் காட்ட  வேண்டும் என்ற ஆசை. “அம்மா அம்மா இன்னிக்கு ஒரு நாள் மட்டும் கொண்டு போறேன்.. ப்ளீஸ்மா.. ப்ளீஸ்மா..” என்று கெஞ்சினான். அம்மா வும், “சரி.. இன்னிக்கு ஒரு நாள் தான்.. பத்தி ரம்..” என்று அனுமதி கொடுத்தார். அவன்  அம்மாவைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான். பள்ளிக்கு வந்ததும் தற்செய லாய் அந்தப் பேனாவை எடுப்பது போல எடுத்து சும்மா ரஃப் நோட்டில் எழுதினான். அவனுக்கு அருகில் உட்கார்ந்திருந்த கிருத்திக் முதலில் கவனிக்கவில்லை. தற்செயலாய் திரும்பிப் பார்த்தவன், “ஐய் புதுப்பேனா.. டேய் ஏதுடா?“ என்று கண்கள் விரியக் கேட்டான். “ எங்க மாமா ஜப்பானிலிருந்து வாங்கி  வந்தார்” என்று சொன்னான் ராம். வகுப்பு தொடங்குவதற்கு முன்னால் எல்லாப்  பையன்களும் ராமைச் சூழ்ந்து நின்று  அந்தப் பேனாவைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள். ராம் யார் கையிலும் பேனா வைக் கொடுக்கவில்லை. அவனுக்கு நெருங்கிய நண்பனான கைலாஷிடம் கூடக்  கொடுக்கவில்லை. அவன் கையிலிருக்கும்.  எல்லாரும் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டார்கள். அந்தப் பேனாவைக் காணவில்லை. வகுப்பறை, அவனுடைய புத்தகப்பை,  அவன் போன இடம், வந்த இடம் எல்லா  இடத்திலும் தேடினார்கள். கிடைக்க வில்லை. மதிய உணவு இடைவேளை சமயத்தில் தான் யாரோ எடுத்திருக்கிறார்கள். அவன் சட்டைப்பையிலேயே இருந்த பேனாவை யார் எடுத்திருப்பார்கள்? ராம் அழுதான். எல்லாரும் அனுதாபப்பட்டார்கள். எல்லா ரும் கடைசி பெஞ்சில் இருக்கும் ஆகாஷைச்  சந்தேகப்பட்டார்கள். ராமின் காதுகளில், “டேய்.. ஆகாஷ் தான் லவட்டிருப்பான்..” ராம் திரும்பி ஆகாஷைப் பார்த்தான். அவன் அமைதியாக புத்தகத்தை எடுத்துத்  திருப்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே இரண்டு முறை அவன் வகுப்பில் திருடி மாட்டியிருக்கிறான். ரோஷனின் காம்பஸ் பாக்ஸைத் திருடி னான். அதைக் கண்டுபிடித்ததும் செமை யான அடி விழப்போகுது என்று எல்லாரும்  காத்திருந்தார்கள். ஆனால் தமிழாசிரியர் நெடுஞ்செழியன் அவனை அழைத்து மென்மையான குரலில். “ஏன் எடுத்தே?“ என்று கேட்டார். ஆகாஷ்  பதில் சொல்லவில்லை. அப்படியே அமைதி யாக தலை குனிந்து நின்றான். “இனிமே எடுக்காதே.. உனக்கு வேணு மின்னா என்கிட்டே கேளு..” என்று சொல்லி  முதுகில் தட்டிக் கொடுத்து அனுப்பி விட்டார்.  வகுப்பில் உள்ள மற்ற பையன்களுக்கு ஏமாற்றம். இதுவே கணக்கு வாத்தியாராக இருந்தால் பின்னி எடுத்திருப்பார். தலை மையாசிரியரிடம் கூட்டிக் கொண்டு போயி ருப்பார். தமிழாசிரியர் சோப்ளாங்கி என்று பேசிக் கொண்டார்கள். இன்னொரு தடவை  விநாயக் வாங்கி வந்த புதிய நோட்டைக் காணவில்லை. எல்லாரையும் சோதனை செய்தால் ஆகாஷின் பைக்குள் இருந்தது.  முதலில் அவனுடைய நோட்டு என்று சொன்னான். “உண்மையிலேயே உன்னுடைய நோட்டா ஆகாஷ்..? சொல்லு..” என்று தமி ழாசிரியர் நெடுஞ்செழியன் கேட்டபோது அவன் அமைதியாக நின்றான். வகுப்பே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவன் ஆமாம் எனத்தலையாட்டினான். தமி ழாசிரியர் அவனிடம் நோட்டைக் கொடுத்தார். தயங்கித் தயங்கி நோட்டை வாங்கிக் கொண்டு போனான் ஆகாஷ். ஆனால் மறுநாள் காலையில் விநா யக்கின் டெஸ்க்கில் அந்த நோட்டு இருந்தது. இப்போது ஜப்பான் பேனா வைக் காணவில்லை. முதலிலேயே தமிழா சிரியர் தண்டனை கொடுத்திருந்தால் அவன்  மறுபடியும் எடுத்திருக்க மாட்டான் என்று எல்லாரும் சொன்னார்கள். தமிழாசிரியர் நெடுஞ்செழியன் வந்த தும் ராம் அழுது கொண்டே சொன்னான். “யாராவது எடுத்திருந்தா கொடுத்து ருங்கப்பா..” என்று சொன்னார் தமிழாசிரி யர். வகுப்பறை அமைதியாக இருந்தது. “ஆகாஷ்கிட்டே கேளுங்க ஐயா..அவன் தான் திருடியிருப்பான்” என்று ஒரு குரல் கேட்டது. ஆனால் தமிழாசிரியர் ஆகாஷ் இருந்தபக்கமே பார்க்கவில்லை. ராமை உட்காரச்சொன்னார். “ஏன் ஆகாஷ் பேரைச் சொல்றீங்க.. ஒரு தடவை தப்பு செஞ்சா மறுபடியும் அவன்  தான் செய்வான்னு எப்படி நெனைக்கிறீங்க. இல்லை.. இந்த உலகத்திலே திருட்டுன்னு எதுவும் கிடையாது.. ஒருத்தன் ஒரு பொருளை எடுக்கிறான்னா.. அவனிடம் இல்லைங்கிறதுக்காக எடுக்கிறான்.. இல்லை ஆசைப்பட்டு எடுக்கிறான்.. அடுத்த வர் பொருளை அனுமதி இல்லாம எடுக்கக்கூடாது என்பதை உணரனும்.. தண்டனை கொடுத்தால் மட்டும் திருந்த மாட்டாங்க. வேற இடங்களில் திருட ஆரம்பிப்பாங்க.. அவங்க உணரனும்னா அன்பாலே மட்டும் தான் சாத்தியப்படும்.. அதனால் தான் நான் யாரையும் தண்டிக்கி றதில்ல. யாரையும் தண்டிக்க யாருக்கும் உரிமையில்ல..” என்று பேசியதைக் கேட்ட மாண வர்கள் அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள். ஆகாஷின் கண்களில் கண்ணீர் பொங்கியது. அவன் அழுதுகொண்டே எழுந்தான், “ உண்மையில் நான் எடுக்கல ஐயா..” என்றான். அவர் அவனருகில் வந்து  அவனை அணைத்துக் கொண்டார். வகுப்பே அதைப் பார்த்து உணர்ச்சிவசப் பட்டது. தமிழாசிரியரின் அணைப்பில் ஆகாஷ் அந்த வகுப்பறையின் அன்பை உனர்ந்தான். ராம் கூட அம்மாவிடம் பேனா தொலைந்ததற்கு திட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தான். அப்போது வாசலில் ஒரு பையன் நின்று கொண்டிருந்தான். “ஐயா இந்தப் பேனா பாத்திரம் கழுவுற இடத்தில இருந்தது.. எங்க டீச்சர் இது உங்க வகுப்பில் தவறவிட்டதான்னு கேட்கச் சொன்னாங்க..” அவனுடைய கையில் ஜப்பான் பேனா இருந்தது.