tamilnadu

img

சத்துணவு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரம் தான் என்பது அநீதி

சத்துணவு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரம் தான் என்பது அநீதி!  சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் பேச்சு

சென்னை, ஆக. 28 - 5 ஆண்டு பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கு 35 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் தரும்போது, 35 ஆண்டுகள் பணியாற்றிய சத்துணவு ஊழியர்களுக்கு வெறும் ரூ. 2 ஆயிரம்  தருவதும், 9 ஆயிரம் ரூபாய் கூட தர மறுப்பது நியாயமா? என்று சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் கேள்வி எழுப்பினார். காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்பு மற்றும் அகவிலைப் படியுடன் 9 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம், பணிக்கொடை 5 லட்சம் வழங்க வேண்டும், 63 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வியாழனன்று (ஆக.28) எழிலகம் வளாகத்தில் கருப்பு உடை அணிந்து இரண்டு நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். சங்கத்தின் தலைவர் பி. செல்லதுரை தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தை தொடங்கி வைத்து எஸ். கண்ணன் பேசியதாவது: “திமுக தேர்தல் அறிக்கை 313ல், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசுப் பணியாளர்களாக்கி, காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, 4 வருடமாக அதனை நிறைவேற்ற மறுப்பது ஏன்? அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தரும் சத்துணவு திட்டத்தில் 63 ஆயிரம் பணியிடங்களை காலியாக வைத்திருப்பது நியாயமா? தனியார் நிறுவனத்தில் 11 ஆண்டு கள் பணியாற்றிய தொழிலாளிக்கு 8 லட்சம் ரூபாயை பணிக்கொடையாக சிஐடியு பெற்றுக் கொடுத்துள்ளது. ஆனால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க அரசு மறுக்கலாமா?” என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். வாக்குறுதி அளித்தபடி, சத்துணவு  ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வுகாண வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தப் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. ஜெசி, “சத்துணவு ஊழியர்களை அரசு  பாராமுகமாக நடத்துகிறது. மாண வர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ப தற்காக மாவட்ட, ஒன்றிய பொறுப்பா ளர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம். அரசு இதனை உணர்ந்து செயல்பட வேண்டும். தனியார் முகமையை தவிர்த்து, அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட சத்துணவு ஊழியர்கள் மூலமே காலை உணவுத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்” என்றார். சமுக நலத்துறை இணை இயக்குநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இரவு  போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.