ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் கரூரில் 27,406 விவசாயிகள் பயன்: ஆட்சியர்
கரூர், அக்.16- கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பஞ்சப்பட்டியில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் புதனன்று “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் மூலம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும், அதன் மூலம் கிராமங்களை தன்னிறைவு பெற்ற கிராமங்களாகவும் மாற்றுவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 12,525 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஐந்தில் ஒரு கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, அந்த ஊராட்சிகளில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். கரூர் மாவட்டத்தில் கடந்த 4.5 ஆண்டுகளில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.1.93 கோடியில் 27,406 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெற அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தையோ நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” என்றார்.
