ஓஎன்ஜிசியில் வருமான வரி விழிப்புணர்வு
காரைக்கால், செப். 6- ஓஎன்ஜிசி அலுவலர்களுக்கு வருமானவரி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை வருமான வரித்துறை சார்பில், நிரவியில் உள்ள ஓன்ஜிசி நிர்வாக அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஓஎன்ஜிசி காரிரி அசெட் நிர்வாக இயக்குநர் மற்றும் அசெட் மேலாளர் உதய் பஸ்லான் தொடங்கி வைத்தார். மதுரை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் டி. வசந்தன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: புதுவை யூனியன் பிரதேசத்தின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தனிநபர் வருமானம் ரூ.33,680-ஐ எட்டியுள்ளது. இது தேசிய சராசரி தனி நபர் வருமானம் ரூ.1,14,710 என்பதைக் காட்டிலும் மேம்பட்டதாகும். எனினும் காரைக்காலை உள்ளடக்கிய மதுரை மண்டலத்தின் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி வளர்ச்சி விகிதம் 5.62 சதவீதம் மட்டுமே இருந்தது. இது நாடு முழுவதும் உள்ள 13.57 சதவீத வளர்ச்சியைவிட மிகவும் குறைவானதாகும். எனவே, இந்த நிதியாண்டில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அனைத்து வருமான வரி செலுத்துவோரும், தங்களது வருமான வரியை தாமாக முன்வந்து செலுத்த வேண்டும். வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது, உரிய ஆதாரங்களுடன் கூடிய வரி விலக்குகளை மட்டுமே கோரி, ரீபண்ட் பெற வேண்டும் என்றார். தஞ்சாவூர் வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ஆர். ராஜராஜேஸ்வரி, வருமான வரி சட்ட விவரங்கள், வரி செலுத்துவோர் நலனுக்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். அலுவலர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர். நாகை வருமானவரி அலுவலர் ஆர். சங்கர நாராயணன் நன்றி கூறினார். நிகழ்வில் ஓஎன்ஜிசி நிதிப்பிரிவு அதிகாரி அபூர்வ அகர்வால், புதுச்சேரி தணிக்கைப் பிரிவு பொது மேலாளர் மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.