tamilnadu

img

ஜிஎஸ்டி வரி விலக்கு ஆய்வுக்குழுவில் தமிழகம் புறக்கணிப்பு... கோரிக்கைகளும் நிராகரிப்பு.... தொழில் வர்த்தக சங்கம் கண்டனம்....

மதுரை:
உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக, மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வா்த்தகசங்கத் தலைவா் என். ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா தொற்று காரணமாக எட்டு மாதங்களுக்கு பின், ஜிஎஸ்டி கவுன்சில் 43-ஆவது கூட்டம் காணொலி வாயிலாக மே 28-ஆம் தேதி நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில், கொரோனா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்படும் ஐந்து சதவீதஜிஎஸ்டியை ரத்து செய்வது, கொரோனா தொடர்பான முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு விதிக்கப்படும் 12 சதவீத வரியை ரத்து செய்வது, ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலியப் பொருள்களைச் சோ்ப்பது, வணிகச் சின்னம் கொண்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது, ஜிஎஸ்டி முறையில் பொருள்கள் குறித்த பட்டியல் எண் அமல்படுத்துவதில் உள்ள பல்வேறு குளறுபடிகளை சரிசெய்து எளிமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தொழில் வணிகத் துறையினர் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், இந்தக் கூட்டத்தில் எந்தவொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படாதது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தற்போது பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள தொழில் வணிகத்துறையினர், இந்த ஆண்டுக்கான பல்வேறு ஜிஎஸ்டி படிவங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை எந்தவித அபராதமும், தாமதக் கட்டணமும் இல்லாமல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.ஜிஎஸ்டியை பெருமளவில் ஈட்டித் தரும் தொழில் வணிகப் பெருமக்களின் நியாயமான நடைமுறை பிரச்சனைகளைக் கூட கவனத்தில் கொள்ளாமல் ஜிஎஸ்டி கவுன்சில்தன்னிச்சையாகச் செயல்படுவது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக, தற்போது மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவில் மேகாலயா, குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கேரளம், ஒடிசா, தெலுங்கானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு தமிழகம் புறக்கணிக்கப் பட்டுள்ளது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த கோரிக்கைகளும், ஆலோசனைகளும் ஏற்கப்பட வில்லை. இது, தமிழக தொழில் வணிகத் துறை மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார்.

;