tamilnadu

img

பச்சை நிறமே... பச்சை நிறமே... - கருப்பு மீனின் ர கசியம் - கோவி.பால.முருகு

ஒரு கிராமத்தில் ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு மனைவி இல்லை. குழந்தை இல்லை. தனியாக இருந்தான். அவன் எப்போதும் தன்னிடம் இருக்கும் பணத்தைச் செலவழிக்கமாட்டான். எல்லோரிடமும் தானம் கேட்பான். ஊரில் உள்ள எல்லோரிடமும் வாங்கி விட்டான். பிறகு என்ன செய்ய என்று தெரியவில்லை. அவன் அந்த ஊரில் ஓடும் ஆற்றுக்குப் போனான்.  அவனிடம் படகு இல்லை. மீன் பிடிக்க வலை இல்லை. அவனிடம் தூண்டில் இல்லை. அவனிடம் இருந்தது ஒரு சிறிய நூல் துண்டு. அதை எடுத்துக் கொண்டு போனான். அங்கே கீழே கிடக்கும்  ஒரு குச்சியை எடுத்து நூலைக் கட்டினான்.  மணலில் முளைத்திருக்கும் நெருஞ்சி முள்ளை நூலின் முனையில் கட்டினான். முள்ளின் நுனியில் மணலில் அலையும் ஏதாவது ஒரு சாணியுருட்டி வண்டை மாட்டினான். தூண்டிலை ஆற்று நீரில் போடுவான். அப்படியே அசையாமல் உட்கார்ந்திருப்பான். ஒரு மீன் கூட கிடைக்காது. மாலையானதும் எழுந்து குடிசைக்குத் திரும்புவான். அப்போது,

“ஆறே ஆறே ஓடும் ஆறே இன்றும் கொடுக்க மனமில்லையா என் பசியைப் போக்க வழியில்லையா என்று பாடுவான். ஆறு பதில் சொல்லாது. களக் புளக் என்று ஓடும். குடிசைக்கு வரும் வழியில் கிடைக்கும் காட்டுக்கீரையைப் பறிப்பான். சமைத்துச் சாப்பிடுவான். அவ்வளவுதான்.  மறுநாளும் மறுநாளும் அப்படித்தான் நடக்கும். ஒரு நாள் மாலை ஒரு அதிசயம் நடந்தது. பணக்காரனின் தூண்டிலில் ஒரு குட்டி மீன் மாட்டி இருந்தது. அது ஒரு குட்டிக்கருப்பு மீன். பணக்காரனுக்கு  மகிழ்ச்சி. அந்த மீனைத் தூண்டிலுடன் எடுத்துக் கொண்டு போனான். வீட்டுக்குள் தூண்டிலைக் கீழே வைத்து விட்டு சமையல் செய்ய பாத்திரம் எடுத்தான். விறகு அடுப்பை மூட்டினான். பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றினான்.  ஒரு வாய்க்குக் கூட வராது அந்த மீன். ஆனாலும் அவன் பிடித்த மீன் அல்லவா? திரும்பிப் பார்த்தான். தூண்டிலில் மீனைக் காணவில்லை. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எங்கே போயிருக்கும் அந்த மீன்? வீடு முழுவதும் தேடினான். வீட்டுக்கு வெளியே அவன் வந்த பாதையில் சென்று தேடினான். ஆற்றங்கரைக்கே போய் விட்டான். ஆனால் குட்டிக்கருப்பு மீன் கிடைக்கவில்லை. இன்றும் காட்டுக்கீரைதான். என்று நினைத்துக் கொண்டே கவலையுடன் திரும்பினான். 

அப்போது அவனுடைய குடிசையிலிருந்து மீன் குழம்பின் மணம் வீசியது. என்னடா இது? உள்ளே நுழைந்தால் அங்கே மீன் குழம்பும், சம்பா அரிசிச்சோறும் சுடச் சுட இருந்தன. வீட்டிற்குள் சுற்றிச் சுற்றித் தேடிப்பார்த்தான். யாருமில்லை. எப்படி இது நடந்தது?  அவன் அன்று தான் நன்றாக மூக்கு முட்டச் சாப்பிட்டான். இப்படியே தினமும் அவன் ஆற்றுக்குப் போய்விட்டுத் திரும்பி வரும்போதெல்லாம் மீன்குழம்பும் சம்பா அரிசிச்சோறும் தயாராக இருந்தன. அவனுக்கு யார் வந்து சமைத்து விட்டுப் போகிறார்கள் என்று பார்க்கவேண்டும் என்று ஆசை வந்தது.  ஒரு நாள் ஆற்றிலிருந்து மத்தியானமே திரும்பி வந்தான். வீட்டுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டான். சன்னல் வழியே எட்டிப் பார்த்தான்.  அப்போது வீட்டுக்குள் ஒரு கருப்புப்பெண் சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவளை இதுவரைப் பார்த்தது இல்லை. அவள் பாடிக்கொண்டே சமைத்தாள், “ஆறே ஆறே ஓடும் ஆறே இன்றும் கொடுக்க மனமில்லையா என் பசியைப் போக்க வழியில்லையா “

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் பாடிய பாடல் எப்படி அவளுக்குத் தெரிந்தது. அவளைப் பிடித்து அடைத்து வைத்தால் காலாகாலத்துக்கும் உணவு கிடைக்குமே. தினம் ஆற்றுக்கு மீன் பிடிக்கப் போக வேண்டாம். உழைக்காமல் சாப்பிடலாம் என்று யோசித்தான். உடனே அவன் அப்படியே மெல்லப் பதுங்கிப் பதுங்கி வீட்டிற்குள் போனான்.  பின்னால் சென்று அந்தக் கருப்புப்பெண்ணின் மீது கயிறை வீசிப் பிடித்தான். ஆனால் என்ன ஆச்சரியம்! அவன் கையில் யாருமே சிக்கவில்லை. அந்தக் கருப்புப்பெண் உட்கார்ந்திருந்த இடத்தில் ஒரு துளி தண்ணீர் மட்டுமே இருந்தது.  அவன் ஓடிச் சென்று வெளியில் பார்த்தான். தூரத்தில் ஆற்றுக்குப் போகும் பாதையில் அந்தக் கருப்புப்பெண் போய்க் கொண்டிருந்தாள். அப்போதும் அந்தப் பாடலைப் பாடிக் கொண்டே போய்க் கொண்டிருந்தாள். “ஆறே ஆறே ஓடும் ஆறே இன்றும் கொடுக்க மனமில்லையா என் பசியைப் போக்க வழியில்லையா? “ அவளைப் பிடிக்க பின்னால் ஓடினான். பிடிக்க முடியவில்லை. அவள் ஆற்றுக்குள் இறங்கினாள். குட்டிக்கருப்பு மீனாய் மாறினாள். அப்படியே மறைந்து விட்டாள். அதன்பிறகு அந்தக்குட்டிக் கருப்பு மீன் வரவேயில்லை. அந்தப் பணக்காரன் இப்போதும் குட்டி மீன் வரும் என்று காத்திருக்கிறான்.  உழைக்காமல் சாப்பிட முடியுமா?

;