tamilnadu

img

மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை!

கோயம்புத்தூர், நவ. 14 - கோவை துடியலூரில் லாட்டரி  அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான அலுவலகம், வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. வியாழக்கிழமை காலையி லேயே இரண்டு கார்களில் மார்ட்டின் வீட்டுக்கு வந்த அதிகாரிகள், சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மட்டுமல்லாமல், மார்ட்டினுக்கு சொந்தமாக உள்ள சென்னையில் போயஸ் கார்டன், தியாகராய நகர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 7 கோடியே இருபது லட்சத்து ஐயாயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது, தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மார்டின் உள்ளிட் டோருடன் இணைந்து கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்தார். இதனை அடுத்து, நாகராஜன், மார்டின், மார்டின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத் தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், இந்த விவ காரத்தில் எந்த முறைகேடும் நடை பெறவில்லை என்பதால் வழக்கை முடித்து வைக்கக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதி மன்றம் மார்டின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்துவைத்தது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, மார்ட்டின் உள்ளிட் டோர் மீதான வழக்கை முடித்து வைத்த ஆலந்தூர் நீதிமன்ற உத்த ரவை ரத்து செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தொடர மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர். வழக்கைப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரே இந்த வழக்கை முடித்து வைக்குமாறு அறிக்கை தாக்கல் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்தப் பின்னணியிலேயே, மத்திய அமலாக்கத் துறையானது, கோவையில் மார்ட்டினுக்கு சொந்த மான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது.