tamilnadu

img

மதம் மனிதனை பிடித்துக்கொண்டால்... - ப.சிதம்பரம்

‘இந்தியாவிற்கே எதிரான கட்சி’

பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது அல்ல;  இந்தியாவிற்கே எதிரான கட்சி. ஆர்எஸ்எஸ்- தான் இந்தியாவை ஆட்சி செய்கிறது. பாஜக செயல் படுத்தும் அனைத்து திட்டங்களும் ஆர்எஸ்எஸ்-சின் திட்டங்களே. பாஜக இந்தியாவின் பெயரை இந்துராஷ்டிரம் என மாற்ற துடிக்கிறது. அதற்கு தடையாக  இந்திய அரசியலமைப்பு சட்டம் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை வைத்துக் கொண்டே, அதன் மாண்புகளை, உள்ளடக்கங்களை சிதைத்து வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து போன்றவை இதன் தொடர்ச்சிதான். சனாதனம், பிராமணியம், இந்துத்துவா. இவை அனைத்தும் ஒன்றே. ஆர்எஸ்எஸ் ஒரு பிராமணிய சங்கம்தான். அதை மறைக்க இந்துத்துவா என்ற பெய ரில் வெகுமக்களை திரட்டுகின்றனர். இந்துத்துவாவை எதிர்த்தால், இந்து மதத்தை எதிர்ப்பதாக மாற்றுகின்றனர். இந்துத்துவா என்பதற்குள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வர்களை கொண்டு வந்து மாய தோற்றத்தை உருவாக்கு கின்றனர். காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைவது தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது. காங்கிரஸ் பலவீனமடைய இந்த கட்சியில் இருந்த தலைவர்கள்தான் காரணம். மாநில அளவில் கட்சியை உடைத்து புதுக் கட்சிகளை தொடங்கினர். அந்த கட்சிகளை காங்கிரஸ் கட்சியோடு ஒருங்கிணைக்க வேண்டும். தற்போதைய நாட்டின் சூழலில் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து பணியாற்ற தேசிய அளவில் இடதுசாரிகள் உடன்பட்டு நிற்கிறார்கள். தலித், பழங்குடி, சிறுபான்மையினர் வாக்குகளால் தான் காங்கிரஸ் உயிர்ப்போடு இருக்கிறது. சிறுபான்மை யினர் ஓட்டுக்களே தேவையில்லை என்று அறிவித்து பாஜக செயல்படுகிறது. தலித், பழங்குடிகளையும் ஒருங்கி ணைக்க பணியாற்றுகிறது. இதை காங்கிரஸ் உணர்ந்து, அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதிலிருந்து...

இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளில் மதவெறி அரசியல் விபரீதமான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் மதவெறி அரசியல் தலை தூக்கினால் மற்ற நாடுகள் பாதிக்கப்படுவதை விட இந்தியா  கூடுதலாக பாதிக்கப்படும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 136 கோடி மக்கள் இந்தியாவில் உள்ள னர்; இதில் 109 கோடி பேர் இந்துக்கள். 20 கோடி பேர்  இஸ்லாமியர்கள்.  3 கோடியே 12 லட்சம் பேர் கிறிஸ்தவர் கள். 2 கோடியே 37 லட்சம் பேர் சீக்கி யர்கள். 96 லட்சம் பேர் பவுத்த மதத்தையும்,  51 லட்சம் பேர் சமண மதத்தை பின்பற்றுபவர்கள். 91 லட்சம் பேர் மற்றவர்கள். ஒரு மதத்தில் பிறந்து விட்டால் அதில் இருந்து எளிதில் வெளியேற முடியாது. பாஜகவை சாடும் அதே நேரத்தில், பாஜக வளர்கிறது என்றால் அதற்கான சூழ்நிலை என்ன என்று பார்க்க வேண்டும். மனிதனுக்கு மத நம்பிக்கை இருப்பது இயல்பு. பின்னர் அது மதப் பற்றாக மாறுகிறது.  அதன்பின்னர் மதச் சாய்மானமாக மாறுகிறது. காலப் போக்கில் மதச் சாய்மானம் நம்முடைய மதம் தனிச்சிறப்புடைய மதம், மற்ற மதத்தை விட என்னுடைய மதம் அடிப்படையிலே உயர்ந்தது என்று எண்ணத்தை தோற்றுவிக்கிறது. பின்னர் அது மத ஆணவமாக மாறு கிறது. மத ஆணவம் மற்ற மதங் களின் மீது ஆத்திரம் கொள்ள வைக் கிறது. இறுதியில் அது மத கொடுமை களுக்கு வழிவகுக்கிறது.

விஷச்செடி

பாஜக வளர்கிறது என்றால் அதற்கு மக்கள்தான் இடமளிக்கிறார்கள். இது நமக்கு நாமே சுமத்திக்கொள்ள வேண்டிய குற்றச்சாட்டு. மண் வளமாக இல்லாவிட்டால் எந்த மரமும் முளைக்காது, வளராது. மத நம்பிக்கை என்பது எப்படி மதக் கொடுமையாக மாறியது என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். வட நாட்டில் இருக்கும் அளவு மதவெறி தென் நாட்டில் இல்லை. அதற்கு  காரணம் வட நாட்டில் நடைபெற்ற 3  நிகழ்வுகள் தென் நாட்டில் நடைபெற வில்லை. முகலாய சக்கரவர்த்திகளின்  ஆட்சி ஏறத்தாழ வடநாட்டை சார்ந்திருந்தது, தென் நாட்டில் நுழைய வில்லை.  இரண்டாவது, 1947ஆம் ஆண்டு பிரிவினை ஏற்பட்ட போது இருந்த குடியேற்றங்கள். அந்த குடி யேற்றங்களும் பஞ்சாப், ஹரியானா, தில்லி, மேற்கு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தான் நிகழ்ந்தது. தென்மாநிலங்களில் குடி யேற்ற பாதிப்பு இல்லை. மூன்றாவது காரணம், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின் நேரடி  தாக்கம் வடநாட்டில்தான் இருந்தது. தென்நாட்டில் இல்லை. இந்த 3 காரணங்களினால் வடநாட்டில் மத வெறி வளர்வதற்கு, மத நம்பிக்கைகள் மதக் கொடுமைகளாக மாறுவதற்கான ஒரு பலமான சூழ்நிலை அமைந்தது. தென்நாட்டில் அப்படிப்பட்ட சூழ் நிலை அமையவில்லை. ஆனால் தென் நாட்டில் அந்த விஷம் நுழையாது, விஷச்செடி முளைக்காது என்று யாரும் நினைக்காதீர்கள்.

மதவெறி விபரீதங்கள்

அந்த மதம் எங்கே இருக்கிறது. அதற்கு வரம்பு என்ன? அது அதன் வரம்பைத் தாண்டி அரசில், அரசியலில் நுழைந்தால் அதனுடைய பாதகங்கள் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மதவெறி விபரீதங்கள் குறித்து பேசும் போது, மதவெறி எப்படி தோன்றுகிறது, எப்படி பரவுகிறது, அதற்கு யார் ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். பாஜகவின் பிரச்சாரகர் ஒருவர் முகமது நபிகள் குறித்து மிகவும் தவறான கருத்தைக் கூறியது, நாடெங்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டில் உள்ள அறிவுஜீவிகள், பத்திரிகை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், நல்ல  எண்ணம் படைத்த மனிதர்கள் அதை எதிர்த்தார்கள். ஆனால் பாஜக அரசு அசையவில்லை. சில நாட்களுக்குப் பிறகு கத்தார் நாட்டில் இருந்து பாஜக வின் பேச்சாளருக்கு கண்டனத்தை தெரி வித்தார்கள்.  அதைத்தொடர்ந்து 15 இஸ்லாமிய நாடுகளின் கண்டனக் குரல் எழுந்தது. அதுவரை அமைதியாக இருந்த ஒன்றிய பாஜக அரசு திடீரென்று அந்த பேச்சாளரை கட்சியை விட்டு நீக்கியது. மேலும் அந்த நாடு களிடம் அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது; ஆளும் கட்சி நடவடிக்கை எடுத்துவிட்டது என்றெல்லாம் சமா தானம் செய்தார்கள். நம்முடைய நாட்டில் இஸ்லாமிய மதத்திற்கு, மதத்தலைவர்களுக்கு அவமரியாதை ஏற்படுகிறதென்றால் அதற்கு இந்திய மக்கள், அமைப்புகள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் குரல்  கொடுத்தால் எங்களுக்கு பாதுகாப்பு கிடையாது; அந்நிய நாடுகள் குரல் கொடுத்தால்தான் எங்களுக்கு பாது காப்பு என்ற எண்ணம் இஸ்லாமிய மக்க ளிடையே வளர்ந்து விட்டால் இந்த விப ரீதம் எங்கு போய் நிற்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மதம் மனிதனை பிடித்துக்கொண்டால்....

எந்த அரசினுடைய விபரீதத்தால் மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அந்த  மக்கள் தங்களுக்கென்று அரசியல்  ரீதியான மருந்து தேடிக் கொள்ளாவிட் டால் இதற்கு பரிகாரம் கிடையாது.  அர சியல் விபரீதத்துக்கு பரிகாரம் அரசியல் பதிலடிதான். அதற்கு மக்கள் தயாராக  வேண்டும். மனிதன் மதத்தின் மீது பற்று  வைப்பது, பிடித்துக்கொள்வது இயல்பு. ஆனால் மதம் மனிதனை பிடித்துக் கொண்டால் என்னவாகும்? இன்று மதம் மனிதனை பிடித்துக் கொண்டிருக்கிறது.  

பாஜக தழைக்க என்ன காரணம்?

ஒரு சில நாடுகள் மட்டும்தான் மத வெறியை உறுதியாக எதிர்க்கின்றன. பிரான்ஸ் நாட்டில் அரசியலில் மதம்  நுழைவதை மிகத் தீவிரமாக எதிர்க் கிறார்கள். அதேநேரம் தனிமனித நம்பிக்கையில் தலையிடுவதில்லை. அந்த மக்களும் அதை ஏற்றுக்கொள் கிறார்கள். ஆனால் நம் நாட்டில் எப்படி மதத்தை புகுத்தலாம் என்பதற்கு தயா ராக இருக்கிறார்களே தவிர, அதை எப்படி தடுக்காலம் என்பதற்கு பலரும் தயாராக இல்லை. மிகுந்த எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். மக்களுடைய மத நம்பிக்கை மத வெறியாக மாறு வதால்தான் பாஜக தழைக்கிறது, வளர் கிறது. அரசிலும், அரசியலிலும் மதம்  நுழைவது இயல்புதான் என்ற நிலைக்கு மக்கள் வந்துவிடும் நிலை உள்ளது.  மத வெறி அரசியல் விபரீதங்கள் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். அதன் தோற்றுவாய் என்ன என்பதை பார்க்க வேண்டும். அதன் விளைவுகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். இந்த விப ரீதங்கள் எங்கு போய் நிற்கும் என்பதை பற்றி கவலைப்பட வேண்டும், சுயமாக சிந்திக்க வேண்டும்.