tamilnadu

img

சிறுதாவூரில் நில மீட்பு போராட்டம் பெ. சண்முகம் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!

சிறுதாவூரில் நில மீட்பு போராட்டம்  பெ. சண்முகம் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!

திருப்போரூர், ஜூலை 31 - சிறுதாவூர் நில அபகரிப்பு பிரச்சனை யில், தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். அண்ணா வழங்கிய நிலம் அபகரிப்பு 1967-இல் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் கிராமத்தில் 20 தலித் குடும்பங்களுக்கு மொத்தம் 53 ஏக்கர் நிலம்  வழங்கப்பட்டது. 1992-க்குப் பிறகு இந்த நிலங்கள் தனியார் ரிசார்ட் இயக்குநர் சித்ரா உள்ளிட்ட நபர்களால் மோசடி யாக அபகரிக்கப்பட்டன. நிலம் பறிக்கப் பட்டதை எதிர்த்து சிபிஎம் அன்றைய மாநில செயலாளர் என். வரதராஜன் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நீதிபதி சிவசுப்பிரமணியம் ஆணையம் பரிந்துரை 2006-இல் முதலமைச்சர் கலைஞர் நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார். இந்த ஆணையம் பறிக்கப் பட்ட நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும், சிறுதாவூர் பங்களா வளாகத்தில் வளைக்கப்பட்டுள்ள 34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களையும் மீட்க வேண்டும் என பரிந்துரை செய்தது. பரணி ரிசார்ட்ஸ் சார்பில் சித்ரா உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், 2014-இல் அந்த வழக்கு முடிவுக்கு வந்தது. பெ. சண்முகம் தலைமையில் மீண்டும் போராட்டம் உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்த நிலையில் பறிக்கப்பட்ட நிலங்களை மீட்கக் கோரி சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நில மீட்புப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். நம்புராஜன், மாவட்டச் செயலாளர் பி.எஸ். பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ. சங்கர், க. பகத்சிங் தாஸ், வட்டச் செயலாளர் எம். செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.  விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி. துளசி நாரா யணன், மாவட்டத் தலைவர் வி. அரி கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன், மாவட்டப் பொருளா ளர் டி. விஜயகாந்த் மற்றும் பல்வேறு நிலை களிலான கட்சி, சங்க பொறுப்பாளர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். திருப்போரூர் வட்டாட்சியர் சர வணன் மற்றும் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் போராட்டம் சாலைமறியலாக மாறியது. காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர் அறிவழகன் தலைமை யிலான காவலர்கள் பெ.சண்முகம் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தனர். முதலமைச்சர் தலையீடு அவசியம்! நிலமீட்புப் போராட்டத்தின் போது, செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நலத் திட்டங்கள் வழங்குவதாக கூறி, நில உரிமையாளர்களிடமிருந்து மோசடி யாக கையெழுத்து பெற்று பரணி ரிசார்ட்ஸ் மற்றும் அவர்களின் உற வினர்கள் பெயரின் மீது பட்டா மாற்றம் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். 2007-இல் இந்த மோசடி கவனத்துக்கு வந்தபோதும் நேரடி போராட்டம் துவக்கப் பட்டதாக அவர் தெரிவித்தார். விசாரணை ஆணையம் இந்தப் பட்டா மாற்றம் மோசடியானது என்றும், பட்டியல் சாதியினருக்கு வழங்கப்பட்ட நிலத்தை பட்டியல் சாதி அல்லாதவர் வாங்கியது சட்டப்படி செல்லாது என்றும் கண்டறிந்தது. மேலும் ஜெயலலிதா பங்களா வளாகத்திற்குள் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான 34 ஏக்கர் தரிசு நிலம் வளைக்கப்பட்டுள்ளதாகவும், அதையும் அரசு மீட்க வேண்டும் என ஆணையம் பரிந்துரை செய்தது. எனவே, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 34 ஏக்கர் நிலத்தை வளைத்துக் கொண்டதாக ஆணையம் கண்டறிந்த பின்னரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நிலங்களை மீட்க தமிழக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என பெ. சண்முகம் சுட்டிக் காட்டினார். வட்டாட்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்திற்குள் 53 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்வது, பவுண்டரி அமைப்பது, வருவாய்த் துறை ஆவணங்களை சரிபார்த்து அரசுக்கு சொந்தம் என்ற அறிவிப்பு பலகை வைப்பது ஆகிய கோரிக்கைகளை வருவாய்த் துறை ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  அண்ணா காலத்தில் நிலம் வழங்கப்பட்டது, கலைஞர் காலத்தில் ஆணையம் அமைக்கப்பட்டது, ஸ்டாலின் காலத்தில் நிலத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் தனிக்கவனம் செலுத்தி உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் பெ. சண்முகம் வலியுறுத்தினார்.