ஆக.31 வரை கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் ஒரிசா, மேற்குவங்க கட லோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆக.31 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய பகுதி களில் இயல்பை ஒட்டியும் இருக்கும். ஆக.25 முதல் 29 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதி களுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.