tamilnadu

img

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் சுகாதார திருவிழா

மதுரை,மே 17- மதுரை  மாவட்டம் கிழக்கு தாலுகாவிற்கு உட்பட்ட  வரிச்சியூரில் உள்ள அரசு பள்ளியில் சுகாதார திருவிழா திங்களன்று நடைபெற்றது. முன்னதாக வரிச்சியூர் புறக்காவல் நிலையத்தை வணிகவரி-  பத்திரப்பதிவு அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார் . தொடர்ந்து வருமுன் காப்போம்  மருத்துவ முகாமினை அமைச்சர் பி.மூர்த்தி,  மதுரை  மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆகியோர் துவக்கி வைத்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் விளக்கி பேசினார். மதுரை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். கிழக்கு ஒன்றிய பெருந்தலைவர் சூரியகலாநிதி, வரிச்சியூர் ஊராட்சித் தலைவர் முத்துலெட்சுமி சரவணன், யா.ஒத்தக்கடை ஊராட்சித்  தலைவர் முருகேஸ்வரிசரவணன், மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர்.

 சுகாதார திருவிழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன் மற்றும்  தாலுகாக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  முகாமில் 21 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர்  மற்றும் செவிலியர்கள் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தனர். கர்ப்பிணி தாய்மார்கள் 31 பேர் சிகிச்சை பெற்றனர்.  இசிஜி 40நபர்களுக்கும் எக்கோ 39 நபர்களுக்கும்  பரிசோதனை செய்யப்பட்டது.  இரத்ததான முகாமும் நடைபெற்றன.  30 நபர்கள் இரத்தம் வழங்கினர். கலைஞர் காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டது. சித்த மருத்துவமும் வழங்கப்பட்டது.

 மொத்தம் 1284நபர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  கிழக்கு வட்டார மருத்துவர் எஸ்.முகமது சுல்தான் நன்றி கூறினார்.  இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், தமிழக மக்களுக்கு தினந்தோறும் அறிக்கைகள் வாயிலாக சிலர் (பாஜக) இரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொண்டு வருகிறார்கள்.  தமிழக மக்களுக்கு எவ்வளவு இரத்த அழுத்தம் ஏற்படுத்தினாலும் தமிழக மக்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இதுவே இந்த அரசின் ஓராண்டு சாதனை என்று தெரிவித்தார்.   அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில்,  100 சதவீதம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் எந்தவொரு பயமுமில்லை. மக்கள் நல்வாழ்வுத்துறை ,பள்ளி கல்வித்துறை ஆகிய 2 துறைகளுக்கும் முதல்வர் முக்கியத்துவம் வழங்கி வருகிறார். மக்கள் எந்தவொரு பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது என முதல்வர் மிக கவனமாக உள்ளார்.  கிராம மக்களுக்காக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் வழங்கியுள்ளார்.  மதுரை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை எட்ட மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான அரசு என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

;