தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிறன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜான்சன் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் முனைவர். மு. சலாஹூதீன் வரவேற்றார். காலை அமர்வில் நடந்த கருத்தரங்கத்தில், சுயசார்புக்கான அறிவியலும், தொழில்நுட்பமும் மற்றும் காலநிலையை தாங்கக்கூடிய ஜனநாயகபூர்வமான வளர்ச்சி என்ற தலைப்பில், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் மேனாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் பொ. இராஜமாணிக்கம் கருத்துரை வழங்கினார்.
சிறந்த பள்ளி விருது 2023-24 கல்வியாண்டில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையால் சிறந்த பள்ளிகளுக்கான விருது பெற்ற தலைமை ஆசிரியர்களான கா.ச. ஜீவானந்தன் (தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி), இரா. மார்செலின் ரெஜினா மேரி (வையம்பட்டி ஒன்றியம் பாம்பாட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி), ச.அரங்கசாமி (புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி) ஆகியோரை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் மு. மாணிக்கத்தாய், மாநில செயற்குழு உறுப்பினர் க. உஷாநந்தினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதியம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், திருச்சிராப்பள்ளி பறவைகள் பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். தேவையான அளவு வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தித் தரவேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக அருகில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யவேண்டும். மகாத்மா காந்தி அரசு மருத்துவ மனையில் ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் விரைவில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் புதிய மாவட்டப் பொருளாளராக ச. மாரிமுத்து, மாவட்டத் துணைத் தலைவராக ரா.சந்திரா, இணைச் செயலாளர்களாக வே. சுகுணா, ஆ. யோகலட்சுமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலச் செயலாளர் எம்.எஸ். ஸ்டீபன் நாதன் நிறைவுரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் மு.மணிகண்டன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். முடிவில், மாவட்டப் பொருளாளர் ச.மாரிமுத்து நன்றி கூறினார். கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.