வீட்டில் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு 22 குட்டிகளை ஈன்றது
தஞ்சாவூர், ஆக. 29- தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில், ஒரு வீட்டிற்குள் இருந்து பிடிக்கப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு 22 குட்டிகளை ஈன்றுள்ளது. தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை, சுந்தரம் நகர் 5 ஆம் தெருவில் ஒரு வீட்டில் பாம்பு நடமாட்டம் இருப்பதாக, பாம்பு உள்ளிட்ட உயிரினங்களை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடும் அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை காப்பகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த காப்பக நிர்வாகி முனைவர் சதீஷ்குமார் மற்றும் அவரது குழுவினர் மருத்துவக்கல்லூரி சாலையில் அந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உயிருடன் அதனை மீட்டு அருங்கானுயிர் காப்பகத்திற்கு கொண்டு வந்தனர். வழக்கம் போல் அந்த பாம்பின் உடல்நலம் குறித்து சோதனை செய்தபோது, விரைவில் பாம்பு, குட்டிகள் ஈன்று விடும் நிலையில் உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கண்ணாடிவிரியன் பாம்பை காப்பகத்தில் வைத்து பராமரித்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அந்த கண்ணாடி விரியன் பாம்பு 22 குட்டிகளை ஈன்றது. இதுகுறித்து காப்பக நிர்வாகி முனைவர் சதீஷ்குமார் கூறுகையில், 22 குட்டிகளை ஈன்றவுடன், இதுகுறித்து தஞ்சை மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது அறிவுறுத்தலின் பேரில், வனத்துறையினரிடம், கண்ணாடி விரியன் பாம்பும் குட்டிகளும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன. பின்னர், அவை அனைத்தையும் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்’’ என்றார்.