6 லட்சம் குடும்பங்களுக்கு இலவசதொகுப்பு
ஓணம் பண்டிகைக்கு வழங்குகிறது கேரள அரசு
திருவனந்தபுரம், ஜுலை 20- கேரள மக்கள் ஓணம் பண்டிகை யை எந்த சிரமமும் இல்லாமல் கொண்டாட அம்மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது. 6 லட்சம் மஞ்சள் அட்டை குடும்பங்களுக்கு 15 பொருட்கள் கொண்ட இலவச ஓணம் தொகுப்பு (கிட்) இந்த முறையும் வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்பில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய், அரை கிலோ சர்க்கரை, பாசிப்பருப்பு, சேமியா பாயசம் கலவை, மில்மா நெய், முந்திரி பருப்பு, சாம்பார் பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், தேயிலை, கொண்டைக் கடலை, ரவை, தூள் சர்க்கரை மற்றும் ஒரு துணி பை ஆகியவை இருக்கும். பாதுகாப்பு இல்லங்களில் உள்ள 4 உறுப்பினர் களுக்கு ஒரு கிட் இலவசமாக வழங்கப் படும். நீல அட்டை குடும்பங்களுக்கு ரூ. 10.90 விலையில் 10 கிலோ அரிசி மற்றும் வெள்ளை அட்டை வைத்திருப்பவர்களுக்கு 15 கிலோ அரிசி வழங்கப்படும். இதன் மூலம் 53 லட்சம் குடும்பங்கள் பயனடையும். 94 லட்சம் அட்டைதாரர்களுக்கு ரூ.25 விலையில் 10 கிலோ “கே அரிசி” வழங்கப்படும். தற்போது ரூ.29-க்கு வழங்கப்படும் அரிசி இதுதான். மாநிலம் முழுவதும் ஓணம் சந்தைகளை சப்ளைகோ நடத்தும். இந்த முறை, திருவனந்தபுரத்துடன் கூடுதலாக, பாலக்காட்டிலும் ஒரு மெகா கண்காட்சி நடத்தப்படும். கேரள அரசு கோரிய அரிசியை ஒன்றிய அரசு நிராகரித்ததை அடுத்து, கேரளா தானாகவே குறைந்த விலையில் அரிசியை வழங்குகிறது. கேரளாவில் உள்ள மக்கள் அரிசி வாங்கும் திறன் கொண்டவர்கள் என்றும், மானியம் வழங்கப்படாது என்றும் முந்தைய யூடிஎப் அரசு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.