இலவச மருத்துவ முகாம்
பாபநாசம், செப். 18- வாஸன் கண் மருத்துவமனை, பாபநாசம் லயன்ஸ் கிளப் ராஜகிரி சுகம் கிளினிக் இணைந்து இலவச கண், பல், சர்க்கரை நோய் பரிசோதனை முகாமை நடத்தின. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரியில் நடந்த முகாமில் குழந்தைகள் நலம், பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர் கார்த்திக்கேயன், பல் மருத்துவர் மோகனப் பிரியா, பொது மருத்துவர்கள் தம்பிதுரை, மணிவேலன் ஆகியோர் 50 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியப் பட்டதுடன், மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ஜெகதீசன், செயலாளர் சிக்கந்தர், பொருளாளர் கணேசன், வட்டாரத் தலைவர் முத்தமிழ்ச் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு
பெரம்பலூர், செப்.18 - உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட நெய்க்குப்பை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட வரகுபாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நெய்க்குப்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்து, மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர், பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணை, உழவர் பாதுகாப்பு அட்டை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை ஆட்சியர் வழங்கினார்.
புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: தன்னார்வலர்கள் பயிற்சி
தஞ்சாவூர், செப். 18- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 90 மையங்களில் நடைபெறுகிறது. இம்மைய தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது . இதில் அனைத்து மையத்தின் தன்னார்வலர்கள் பயிற்சி பெற்றனர். இப்பயிற்சிக்கு வட்டார கல்வி அலுவலர் கலாராணி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இப்பயிற்சியிக்கு, கருத்தாளர்களாக ஆசிரியர்கள் ரங்கராஜன் மற்றும் பிரகாஷ் செயல்பட்டனர். ஆசிரிய பயிற்றுநர் ஷாஜிதா பானு நன்றி கூறினார்.