கொலம்பியா முன்னாள் ஜனாதிபதிக்கு 12 ஆண்டுகள் வீட்டுச்சிறை
பொகொட்டா, ஆக. 3- லஞ்ச வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி இவாரோ உரிபேவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச்சிறை தண்டனை விதித்துள்ளது. சாட்சியங்களைக் கலைக்க முயன்றது உள்ளிட்ட அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய நீதிமன்றம், இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. எனினும், அரசியல் நோக்கங்களுக்காக தனக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ள தாகக் கூறிய உரிபே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்ப தாகவும் அறிவித்துள்ளார். 2002 முதல் 2010-ஆம் ஆண்டுவரை அமெரிக்க ஆதரவுடன் கொலம்பியாவை ஆண்டு வந்த இவாரோ உரிபே, மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதாகவும், 1990-களில் ஆயுதக் குழுக்கள் வளர்வதற்குக் காரணமாக இருந்த தாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில் தனக்கு எதிரான சாட்சியங்களைக் கலைக்க அவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டிலேயே தற்போது அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் வரை போரை கைவிட மாட்டோம் : ஹமாஸ்
காசா, ஆக. 3- இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2ஆவது ஆண்டை நெருங்கி உள்ளது. இப்போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்து உள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் தங்களது ஆயுதங்களை கீழே போட விருப்பத்தை வெளிப்படுத்தி இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காப் தெரிவித்தார். ஆனால் அதை ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வரை இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிட மாட்டோம். ஜெருசலேமை தலைநகராக கொண்ட ஒரு சுயாதீனமான, முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாத வரை ஆயுதங்களை கீழே போடுவதற்கு நாங்கள் உடன்படமாட்டோம். எங்களது உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது” என அதில் கூறப்பட்டுள்ளது.