tamilnadu

img

வனநிலம் - எமது உயிர் மூச்சு - பெ.டெல்லிபாபு

வனநிலம் - எமது உயிர் மூச்சு

சுதந்திர இந்தியாவின் தொடக்க ஆண்டுகளில் 30 கோடி ஏக்கர் பரப்பிலான வேளாண் சாகுபடி நிலங்கள் இருந்தன. இதில் ஒரு பகுதி நிலங்களை வனங்களில் வாழும் ஆதிவாசிகள் அனுபவித்துவந்தனர். இருப்பினும் பெரும்பான்மையான நிலங்கள் ஜமீன்தார்கள், ஜாகீர்தார்கள், குறுநில மன்னர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. இந்த நிலங்களைக் குத்தகை விவசாயிகளுக்கு விட்டு அதில் வரும் குத்தகைக் கொள்ளையை வைத்து கொழுத்துவந்தனர் நிலப்பிரபுக்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது நாட்டை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த காலத்தில் நினைவிடங்களில் பொறிக்கப்பட்ட வைரங்கள் மீதும், கோவில்களில் இருந்த சிலைகள் மீதும், நமது கலைஞர்களால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் மீதும், நமது இந்திய தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பின் மீதும் பட்ட அந்த நயவஞ்சகர்களின் பார்வை நமது மண்ணின் மீதும், மலைகள் மீதும், வனங்கள் மீதும், இயற்கை வளங்கள் மீதும் பட்டது. காடுகளில் உள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க, சூறையாடத் திட்டமிட்டனர். வனங்களில் பாரம்பரியமாக விவசாயம் செய்துவந்த விவசாயிகளை அந்நிலங்களை விட்டு வெளியேற்றத் திட்டம் தீட்டினர். சிலரைப் பணம் தந்து வெளியேற்றினர். பெரும் தொகை அல்ல - 1860களில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு அரை அணா (3 பைசா) தந்ததாகவும் வரலாற்று வரிகள் நமக்குப் போதிக்கின்றன. ஆதிவாசிகளின் வீரமிக்க கிளர்ச்சிகள் பணம் தந்தாலும் வெளியேற மாட்டேன் என அடம்பிடித்த சம்பவங்களையும், எதிர்க்குரல் எழுப்பிய நிகழ்வுகளையும், கலகம் செய்த கிளர்ச்சியாளர்களையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தங்களும் ஏற்பட்டன. 1751 முதல் 1801 வரை இந்த 50 ஆண்டுகளில் மட்டுமே ஆதிவாசிகளும் விவசாயிகளும் இந்தியாவில் நிலத்திற்காக நடத்திய கிளர்ச்சிகள் மற்றும் எழுச்சிகள் நூறு என்கிற எண்ணிக்கையைத் தாண்டும். வீரமிக்க போராட்டங்களின் வரலாறு சந்தால் கலகம் (1885): ஆதிவாசிகள் தங்களது நில உரிமையை நிலைநாட்ட இன்றைய ஜார்க்கண்ட் மாநிலம், அன்றைய ஒன்றுபட்ட மேற்குவங்க மாநிலத்தில் நடத்திய வீரமிக்க கலகம். இது வெறும் போராட்டம் அல்ல. 25,000 ஆதிவாசிகளின் உயிர்த் தியாகத்தால் எழுப்பப்பட்ட, எழுதப்பட்ட வீர காவியம். முண்டா எழுச்சி (1895-1900): அன்றைய பிஹார் மாநிலம் சோட்டா நாக்பூரில் பிர்சா முண்டா தலைமையிலான முண்டா இன ஆதிவாசிகளின் ஐந்து ஆண்டுகால எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆதிவாசிகளின் உயிர்த் தியாகத்தால் நிரம்பியுள்ளன நமது வரலாற்றுப் பக்கங்கள். வார்லிகளின் போராட்டம் (11-10-1946): மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற மகத்தான ஆதிவாசிகளின் எழுச்சி. இந்தப் போராட்டத்தை ஒடுக்க ஐந்து ஆதிவாசிகளைக் கொன்றுகுவித்தது பிரிட்டிஷ் ராணுவம். எனினும் அஞ்சாமல் முன்னேறிய ஆதிவாசிகளின் படையைக் கண்டு பின்வாங்கியது ராணுவம். தெலுங்கானா புரட்சி (1946-1951): ஆயுதம் தாங்கிய புரட்சி. 4,000 பேரின் உயிர்த் தியாகத்தால் எழுதப்பட்ட சரித்திரக் காவியம். வாச்சாத்தி போராட்டம் (1992): தமிழகத்தில் தொடங்க ப்பட்ட ஆதிவாசி மக்களுக்கான மகத்தான போராட்டம். வனச் சட்டங்களும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளும் ஆட்சியாளர்கள் போரிடும் மக்களைச் சமாதானப் படுத்த சில சட்டங்களைக் கொண்டுவந்தனர்: • சோட்டா நாக்பூர் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் 1908 • சந்தால் குத்தகைதாரர்கள் சட்டம் 1876 • மலபார் குத்தகைதாரர் சட்டம் 1929 இதன் பலன் தற்காலிகமாகவோ அல்லது ஓரளவுக்கு மட்டுமே பலன் தந்தது. ஆதிவாசிகளை அப்புறப்படுத்தி அந்த நிலத்தை அபகரிக்க அதன் பிறகு பல சட்டங்களை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கொண்டுவந்தனர். பிரிட்டிஷ் வனச் சட்டங்களின் வரலாறு • 1855: மெட்ராஸ் ராஜதானி வன இலாகா துறை உருவாக்கம் • 19/12/1856: டாக்டர் ஹக் பிரான்சிஸ் க்ளெகான் வனக் காப்பாளராக நியமனம் • 1865: முதல் இந்திய வனச் சட்டம் • 1882: மெட்ராஸ் மாகாண வனச் சட்டம் உருவாக்கப்பட்ட எல்லாச் சட்டங்களும் ஆதிவாசிகளை அவர்களின் பாரம்பரிய மண்ணிலிருந்து அப்புறப்படுத்தி அதில் பணக்கார விவசாயிகளையும் பெரும் முதலாளிகளையும் நிலைநிறுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் தேக்கு மற்றும் சந்தன காடுகளாக இருந்த ஊட்டி, கொடைக்கானல், டார்ஜிலிங் போன்ற பகுதிகள் பிறகு தேயிலை எஸ்டேட்டுகளாகவும், காபி எஸ்டேட்டுகளாகவும் மாறிவிட்டன. வன உரிமைச் சட்டமும் மோடி அரசின் தாக்குதலும் “ஆதிவாசிகளை அப்புறப்படுத்திவிட்டால் வனங்கள் தானாக அழிந்துவிடும்” என்று பல ஆய்வுகள் எச்சரித்த போதிலும் எதையும் கணக்கில் கொள்ளாமல் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கிற்கு எதிராய் நமது போராட்டங்கள் தீவிரமடைந்தன. நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆதிவாசி மக்களின் குரல் நாடாளுமன்றத்திற்கு உள்ளே இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களால் எதிரொலிக்கப்பட்டது. வனங்களிலும் மலைகளிலும் ஆதிவாசி மக்களின் இருப்பை நிலைநாட்டும் ஒரு சட்டம் (வன உரிமை பாதுகாப்புச் சட்டம் - 2006) பிறப்பிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த இந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில்தான் இறங்கியுள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசு. பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் அதிகரிப்பு (2014-2023): • தேசிய பூங்காக்கள்: 88லிருந்து 106 • வனச் சரணாலயங்கள்: 525லிருந்து 573 • பாதுகாக்கப்பட்ட ரிசர்வ் நில வளாகங்கள்: 43லிருந்து 220 • புலிகள் சரணாலயங்கள்: 47லிருந்து 55 • யானைகள் வழித்தடம்: 88லிருந்து 150 புதிய திட்டங்கள் என்கிற பெயரில் ஆதிவாசிகளின் இருப்பிடம் சுருக்கப்படுகிறது. கார்ப்பரேட் கொள்ளையும்  புதிய சட்டங்களும் இந்திய பூகோளப் பரப்பில் 21.7 சதவீதம் (7,13,789 சதுர கிலோமீட்டர்) பரப்பில் உள்ள வன நிலங்களையும் அதன் இயற்கை வளங்களையும் கார்ப்பரேட்களுக்குத் தாரைவார்க்கத் துடிக்கிறது மோடி அரசு. அந்த நோக்கத்தை நிறைவேற்ற முளைத்த புதிய சட்டங்கள்தான்: • தேசிய காடு வளர்ப்புத் திட்டம் மற்றும் சட்டம் - 2016 • வன உரிமை பாதுகாப்பு திருத்தச் சட்டம் - 2023 இந்தச் சட்டங்களால் படிப்படியாக ஆதிவாசி மக்களைத் தங்களின் பாரம்பரியமான நிலங்களிலிருந்து வெளியேற்றத் துடிக்கிறது மோடி அரசு.