tamilnadu

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம் 

பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 20 -  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பொருட்கள் பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ குறைந்தபட்சமாக ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் கனிராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பட்டுக்கோட்டை நகராட்சி நகர் பகுதியில் செயல்படும் வணிக நிறுவனங்கள், தேநீர் கடைகள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் நகராட்சியால் உரிய உரிமம் பெற்று இயங்க வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் இயங்கும் நிறுவனங்கள் குறித்து நகராட்சி அலுவலர்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் எந்தவித அறிவிப்புமின்றி மூடி சீல் வைப்பதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகிழி பயன்பாடு குறித்து தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது. பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் முற்றிலும் ஒழிக்கப்படும்.  மேலும், பொதுமக்கள் பிளாஸ்டிக் கேரிபேக்குகளில் உணவு மற்றும் இதரபொருட்கள் வாங்குவதை தவிர்த்து பட்டுக்கோட்டை நகரத்தை தூய்மையாக பராமரிக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பிற்கும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள் மற்றும் பொருட்கள் பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.