ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி மறைமுக ஏலம் கள ஆய்வு
பாபநாசம், ஜூலை 2 - தஞ்சாவூர் விற்பனைக் குழுவின்கீழ் இயங்கி வரும் கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருப்பனந்தாள் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்திக்கான மறைமுக ஏலம் நடந்து வருகிறது. இதனை கண்காணிக்கும் பொருட்டு, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் துணை இயக்குநர் மோகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இக்குழுவானது முதல் கட்டமாக பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட சரகத்திற்கு உட்பட்ட மேல செம்மங்குடி, ஆதனூர் ஆகிய கிராமங்களில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அதன் பின்னர் பருத்திக்கு அதிக விலை கிடைப்பதற்காக விவசாயிகள் தங்கள் பருத்தியினை நன்கு உலர்த்தி, தரம் பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு எடுத்து வர அறிவுறுத்தினர். இதன் பின்னர் மேற்கண்ட குழுவினர் இ-நாம் மூலம் பருத்தி மறைமுக ஏலம் நடக்கும் பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு சரியான நேரத்திற்குள் பண வர்த்தனை மேற்கொள்ளப்பட்டதா என ஆய்வு செய்தனர். நடப்பாண்டில் இதுவரை கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.22 கோடி மதிப்பிலான 185.80 மெட்ரிக் டன் பருத்தி வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 874 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.7,699-க்கும், குறைந்தபட்சம் ரூ.5,249-க்கும் விற்பனையானது. பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ 1.20 கோடி மதிப்பிலான 186.70 மெட்ரிக் டன் பருத்தி வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 850 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.22.52 லட்சம் மதிப்பிலான 34.10 மெட்ரிக் டன் பருத்தி வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 283 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.7,339-க்கும், குறைந்தபட்சம் ரூ.5,599-க்கும் விற்பனையானது.