விவசாயிகள் குறைதீர் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பெரம்பலூர். ஆக.29- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேளாண்மைதுறையின் மூலம் 4 விவசாயிகளுக்கு ரூ.1,72,121 மதிப்பில் மண்புழு உரப்படுக்கை, பருத்தி விதைகள் மற்றும் சொட்டுநீர் பாசனத்திற்கான ஆணையினையும், தோட்டக்கலைத்துறை மூலம் 3 விவசாயிகளுக்கு ரூ.4,80,000 மதிப்பிலான நிரந்தர காய்கறி பந்தல் அமைப்பதற்கான ஆணையினையும் என மொத்தம் ரூ.6,52,121 மதிப்பிலான வேளாண் உபகரணங்கள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் பேசுகையில், “தெருநாய்களால் பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் மிகுந்த சிரமத்திற்கும், பாதிப்பிற்கும் உள்ளாகி வருகின்றனர். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன் பேசுகையில், “பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை நியமனம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார். அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.