நல்லிப்பட்டி கிராமத்தில் காலம் காலமாக சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்குக! விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை, ஆக. 21- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா நல்லிப்பட்டி கிராமத்தில் காலம் காலமாக சாகுபடி செய்துவரும் விவசாயிகள் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பெருங்குடி வட்டத்திற்கு உட்பட்டது நல்லிப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காலம் காலமாக இக்கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், 1963-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டத்தின்படி, இவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில், பலருக்கு வருவாய்த்துறை கணக்கில் உட்பிரிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. அதே நேரத்தில், இவர்களுக்கு அரசால் வழங்கப்படும் பயிர் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட சலுகைகளை, சாகுபடிதாரர்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து பெற்று வந்துள்ளனர். இந்த நிலங்களில் வீடுகட்டி வசிப்பவர்களுக்கு குடும்ப அட்டை, ரேசன் அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற்று வருகின்றனர். அரசால் வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கிராமத்தில் வசிக்கும் கருப்பையா, அர்ச்சுணன், கோவிந்தன், பிரமன் ஆகியோர் வசிக்கும் வீடுகளை, அந்த கிராமத்திற்கு சம்மந்தமே இல்லாத நபர்களுக்கு மோசடியாக பட்டா மாற்றப்பட்டுள்ளது. மேலும், அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறும் மிரட்டி வருகின்றனர். எனவே, மேற்படி போலியாக போடப்பட்ட பட்டாக்களை ரத்து செய்வதோடு, ஏற்கனவே பட்டா கொடுக்கப்பட்டு, அவர்களின் வாரிசுகளுக்கு உட்பிரிவு செய்யப்படாமல் உள்ள நபர்களுக்கு உட்பிரிவு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கறம்பக்குடி தாலுகா வெள்ளாளவிடுதி கிராமத்தில் வசிக்கும் கமலா என்பவரது பெயரில் உள்ள வீட்டு வரி, அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் பெயரில் மாற்றப்பட்டுள்ளது. போலியாக போடப்பட்ட இந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும். அதேபோல், காட்டாத்தி கிராமத்தில் 1989-ல் ராமலிங்கம் என்பவர் கிரையம் பெற்று வீடு கட்டிய இடத்தை, செல்வரெத்தினம் என்பவர் போலியாக பட்டா பெற்றுள்ளார். அதை ரத்து செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார். இதுகுறித்து பதிலளித்த ஆட்சியர், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.