tamilnadu

மயான பாதை-சுடுகாடு கொட்டகைக்கு வனத்துறை அனுமதிக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மயான பாதை-சுடுகாடு கொட்டகைக்கு  வனத்துறை அனுமதிக்க வேண்டும்  விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கடலூர், அக்.22- பண்ருட்டி வட்டம் திருத்துறையூர் மற்றும் சின்னப்பேட்டை கிராம மக்களுக்கு மயான பாதையும் மயான கொட்டகையும் அதற்கு தண்ணீர் வசதியும் செய்து தர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறை அமைச்ச ருக்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன் அனுப்பியுள்ள  மனுவில் கூறியிருப்பதாவது:  திருத்துறையூர் மற்றும் சின்னப்பேட்டை கிராம மக்கள் சுடுகாட்டு பாதையும் கொட்டகையும் தண்ணீர் வசதியும் இன்றி தவித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டு களாக மக்கள் கோரிக்கைக்கு வனத்துறை அனுமதி மறுத்து வருகிறது. 1986ல் தமிழக அரசு சில வசதிகளை செய்து தருவதற்காக மக்கள் பயன்படுத்தி வந்த மலட்டாறு பகுதியை வனத்துறைக்கு கொடுத்தது. அரசு இதழில் இரு கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பிற மக்களுக்கு இடுகாட்டுக்கான பகுதியையும் பாதைக்கான இடத்தையும் குறிப்பிட்டு வெளியிட்டிருந்தது. ஆனால் வனத்துறை அதை தனது சொத்தாகக் கருதி ஆண்டாண்டு காலமாக சுடுகாடாகப் பயன்படுத்தப்பட்ட இடத்திற்கும் அரசு இதழில் ஒதுக்கப்பட்ட இடத்திற்கும் அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது. பல ஆண்டுகளாக மனு கொடுத்தும், கடந்த மாதம் ஆன்லைன் மூலம் மனுக்கள் அனுப்பியும் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே அமைச்சர் தலையிட்டு இரு கிராம த்திற்கும் மயானத்திற்குச் செல்வதற்கான பாதையையும் மயான கொட்டகையும் தண்ணீர் வசதியும் செய்து தர வேண்டும் என கிராம பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடலூர் மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.