tamilnadu

img

பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேருவதை உறுதிப்படுத்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேருவதை  உறுதிப்படுத்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 12-  தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி மணக்காடு வீ.கருப்பையா, பேராவூரணியில், அக்னி ஆறு வடிநிலக் கோட்டம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:   மணக்காடு தேவர் குளம், கூத்தாண்டர் குளம் ஏரிகளுக்கு வில்லுணி ஆற்றில், மாத்தூர் ராமசாமிபுரத்தில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து தண்ணீர் வந்து  சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் வர வேண்டிய சப்ளை சேனல் அணைக்கட்டிலிருந்து, தேவர் குளம் வரை சில இடங்களில்  தூர்ந்து போயும், செடி, கொடிகள்  அதிகளவில் காடு போல வளர்ந்தும்  உள்ளது. அதனால் அணைக்கட்டி லிருந்து மணக்காடு ஏரிகளுக்கு சிஎம்பி தண்ணீர் வந்து சேர்வதில்லை. காட்டாற்றை நம்பித்தான் மணக்காடு கிராமத்தில் உள்ள குளங்கள் நிரம்பி  விவசாயம் நடைபெறுகிறது. எனவே, அணைக்கட்டிலிருந்து மணக் காட்டுக்கு வரும் சப்ளை சேனலை தூர்வாரி செடி, கொடிகளை அகற்றி மணக்காடு ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பி  விவசாயம் செய்ய ஏற்பாடு செய்து  கொடுக்குமாறு கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், கல்லணைக் கால்வாய் கோட்டப் பிரிவு, பொதுப்பணித்துறை உதவிக் கோட்டப் பொறியாளரிடம் அளித்த கோரிக்கை மனுவில், சேதமடைந்த ஏரி மடை மற்றும் வீரக்குடி கிளை வாய்க்கால், ஊற்றுப்பாலம் வரத்து வாய்க்கால்களை சீரமைத்து நீர் வரத்தை உறுதி செய்து தரவேண்டும்.  மணக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட மணக்காடு கிராமத்தில் கூத்தாண்டர் குளத்தில் கீழ்புறம் காளியம்மன் கோவில் அருகில் உள்ள பாசன மடை மற்றும் வடிகால் வசதிக்காக அமைக்கப்பட்ட மடை முற்றிலும் இடிந்து சேதமடைந்து விட்டது. அதற்கு தண்ணீர் வரும் ஆற்று வாய்க்காலும் தூர்ந்து நீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. உடனே  மடையை புதியதாக அமைக்கா விட்டால் குளத்தில் தண்ணீர் தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது. எனவே எங்கள் பகுதி விவசாயிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். என கூறப்பட்டுள்ளது.