ஒரு புரட்சிகரமான மார்க்சிஸ்ட் கட்சியினுடைய அமைப்பை தமிழ்நாடு முழுவதிலும் விரிவாக்கும் பணியை சிறப்புறச் செய்யுங்கள். இந்த நேரத்தில், விடுதலைப் போராட்ட இயக்கத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும், உயிர்த்தியாகம் செய்த தியாகிகளை நினைவிலே கொண்டு அவர்களுடைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வோம், நம்முடைய தோழர்கள் அனைவரும், இந்த லட்சியம் நிறைவேறுவதற்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்கு சேவை செய்து அதில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் நினைவுகளை போற்றுவோமாக! மதவெறி, வகுப்புவாத, பாசிச சக்திகளை தனிமைப்படுத்துவதற்கும், முறியடிப்பதற்கும் கட்சியின் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில், தமிழகத்தில் ஒரு பலம் பொருந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கும், ஒரு சக்தி வாய்ந்த இடதுசாரி ஜனநாயக முன்னணியை அமைப்பதற்கும், நம்முடைய கட்சித் தோழர்கள் அனைவரும் இரவு பகல் பாராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் ஜனநாயக புரட்சி ஓங்குக! இன்குலாப் ஜிந்தாபாத்!