tamilnadu

img

கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் நீர்வரத்து இல்லை

கூடலழகர் பெருமாள்  கோவில்  தெப்பக்குளம் ஆக்கிரமிப்புகள்  அகற்றப்பட்டாலும் நீர்வரத்து இல்லை 

மதுரையில் தினசரி மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நகரின் மையப் பகுதியான பெரியார் பேருந்து நிலையம், நேதாஜி ரோடு, ரயில் நிலையம் என்று அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான டவுன்ஹால் ரோடு, மேலமாசி வீதி போன்ற பகுதிகளில் பெய்யும் மழை நீரை கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளத்திற்கு கொண்டு வந்தால் அங்கு நிரந்தரமாக நீர்த்தேக்க முடியும். அதே போல் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தேங்கும் மழை நீர் மதுரை டவுன்ஹால் சாலை வழியாக கூடலழகர் கோவிலின் தெப்பக்குளத்திற்கு செல்வதற்கு வழிகள் இருந்தும் அந்த தண்ணீர் அங்கு செல்லவில்லை. கழிவுநீர் தான் செல்கிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நீர்வள மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் தற்போது கழிவுநீர் தேங்கும் இடமாக மாறி உள்ளது. சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த தெப்பக்குளம், கடந்த காலங்களில் கால்வாய் வழியாக கோச்சடையிலிருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் பெற்றது. 1960 வரை, தெப்பக்கு ளத்தில் தண்ணீர் நிரம்பிய நிலையில் திருவிழா காலங்களில் பயன்படுத்தி யுள்ளனர். ஆனால் 1980களில் குளத்தைச் சுற்றி கடைகள் அக்கிரமிப்பு செய்யப்பட்ட தால் தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது. இப்போது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தலின் பேரிலும், நீதிமன்ற உத்தரவின் பேரிலும் இந்து அறநிலையத்துறை, மாநகராட்சியுடன் இணைந்து தெப்பக்குளத்தை மீட்க நடவடிக்கை எடுத்தது. தெப்பக்குளத்தை சுற்றியிருந்த கடைகள் அகற்றப்பட்டன. “தற்போது, மைய மண்டபம், படிகள் பாதுகாக்கப்படுகின்றன. தண்ணீர் வரத்து சீராக இருக்கும்படி மாநகராட்சியுடன் இணைந்து திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலைய  பகுதியில் மழைநீர் சேகரிப்பை குளத்துக்கு மாற்றுவதோடு, வைகை ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரும் வாய்ப்பும் ஆராயப்படுகிறது. இந்த குளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தால், நான்கு மாசி வீதி பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அருகிலுள்ள பகுதிகளுக்கு நீர்மட்டம்  ஒரு கூடுதல் ஆதாரமாக இருக்கும்” என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கூறுகிறார்கள். நகர்ப்புற வளர்ச்சியால் அழிந்து போன நீர்நிலைகள், நிலத்தடி நீர் பாதுகாப்புக்கும், மழைநீர் சேமிப்புக்கும் மிக அவசியமானவை. வண்டியூர் கண்மாய், மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் போல, கூடலழகர் கோவில் தெப்பக்குளமும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தால், மதுரையின் நீர்வள மேலாண்மை மேம்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். -ஜெ.பொன்மாறன்