tamilnadu

img

வெற்றுப் பெருமையும் உண்மை முகமும் - சா.பீட்டர் அல்போன்ஸ்

வெற்றுப் பெருமையும் உண்மை முகமும்

மோடி அரசிடம் விலைபோன ஊடகங்களும், வருமானவரி ஏய்ப்பு, பங்குச் சந்தை முறை கேடுகள், அந்நிய செலாவணி மோசடிகள் போன்ற பல விசாரணை வளையங்களுக்குள் சிக்கியிருக்கும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும், “பிரதமர் மோடி யின் ஜி.எஸ்.டி வரி குறைப்பை” இரவு பகல் பாராமல் இருபத்திநான்கு மணிநேரமும் போற்றிப் புகழ்ந்து வணங்கி வருகின்றனர். பாஜகவின் அமைச் சர்களும், முதலமைச்சர்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் கடைவீதிகளுக்கும், வணிக மையங்களுக்கும் நேரில் சென்று வணி கர்கள் விலைகளைக் குறைத்துவிட்டார்களா என்று சரிபார்ப்பதும், பொதுமக்களிடம் நலன் விசாரிப்பதும், அதை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதிலும் கவன மாக இருக்கிறார்கள். முந்தைய காங்கிரஸ் அரசு கடுமையான வரிகளை விதித்து மக்களைக் கொடு மைப்படுத்தியது போலவும், “மோடி எனும் அவதார புருஷர்” வந்து மக்களின் வரிச்சுமையைக் குறைத்தது போலவும் இவர்கள் போடுகின்ற “திருட்டு நாட கத்தைப்” பார்த்து பொதுமக்கள் வேதனைப்படு கின்றனர்.

திருட்டுத்தனமான’ பெருமை

மது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகப் பொருளாதார வரலாற்றில் இப்படியொரு வரிக் குறைப்பு நடந்ததே இல்லை என்றும், மோடியைத் தவிர வேறு யாராலும் இதனைச் சாதித்திருக்க முடியாது என்றும் பீற்றிக்கொள்கிறார். சில வருடங்க ளுக்கு முன்பு பால் பவுடருக்கும், அரிசி, ரொட்டிக்கும், மருந்துகளுக்கும், சவப்பெட்டிக்கும்கூட வரி விதித்தபோது, அது மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு என்று வாய்கூசாமல் சொன்னவர்தாம் இவர். தற்போது வரி குறைப்புக்கு மோடி மட்டுமே காரணம் என்று எப்படி வெட்கமின்றி பேசமுடிகிறது? “தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்று இவர்களை நினைத்துத்தான் வள்ளுவர் சொல்லிவிட்டுப் போனார்!

மோடியின் முரண்பாடு

“நல்ல, எளிமையான வரிவிதிப்பு” (Good & simple tax) என்ற அடிப்படையில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்த திட்டமிட்டது. “என் உயிர் இருக்கும்வரை இந்த வரியை நடை முறைப்படுத்த உடன்படமாட்டேன்” என்று வீர வசனம் பேசியவர்தான் அன்றைய குஜராத் முதல மைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மோடி. பாஜக ஆண்ட அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி வரியைக் கடுமையாக எதிர்த்தன. சொன்னதை மாற்றிச் சொல்வதையே வாடிக்கை யாக வைத்துள்ள நமது “இரட்டை நாக்கு” பிரதமர், பிரதமரானவுடன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். ஜிஎஸ்டி வரியை 2017-இல் அமல்படுத்தி னார். இரண்டு அடுக்கு வரியாக திட்டமிடப்பட்டி ருந்ததை அநியாயமாக நான்கு அடுக்குகளாக மாற்றி 5, 12, 18, 28 சதவீதம் என வரி விதித்தார். எதிர்க் கட்சிகளும், தொழில் நிறுவனங்களும், வியாபார சங்கங்களும், பொதுமக்களும் இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரியபோது மோடி காதுகொடுத்து கேட்கக்கூட தயாராக இல்லை.

அவமானங்கள்

பெருவணிகர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்து வரிவிதிப்பில் இருக்கிற முரண்பாடுகளையும், நடைமுறைச் சிக்கல்களையும் எடுத்துரைத்தபோது அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார். கோவை மாநகரின் மூத்த வணிகர், உணவு விடுதி களில் ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் வெவ்வேறு வரிகளை விதிப்பதால் ஏற்படுகின்ற நடைமுறைச் சிக்கல்களை எடுத்துச்சொன்னபோது தன்னை அவர் அவமானப்படுத்திவிட்டார் என்று நிர்மலா சீதாராமன் கொக்கரித்ததை எப்படி மறக்க முடியும்?  சம்பந்தப்பட்ட வணிகர், நிதி அமைச்சரைச் சந்தித்து மன்னிப்புக்கேட்டதைக்கூட தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பிய வக்கிர புத்தியை நாம் பார்க்க வில்லையா? ஒரு பட்டதாரி இளைஞர், “சிங்கப்பூரைப் போல நம் நாட்டிலும் இரண்டே அடுக்குகளில் வரி விதித்தால் என்ன?” என்று கேட்டபோது நிதி அமைச்சர், “இந்த கேள்வியை நீ சிங்கப்பூரில் கேட்க முடியுமா? கேட்டிருந்தால் ஜெயிலுக்குத்தான் போகவேண்டும். இங்கே அதிகமான ஜனநாயகம் இருப்பதால் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள்” என்று எள்ளி நகையாடியதை எப்படி மறக்க முடியும்?

வழிப்பறிக் கொள்ளை

பிரதமர் “இந்த வரி குறைப்பினால் ரூ.2,50,000 கோடிகளை மக்கள் சேமிக்க முடியும்” என்று தெரி வித்தார். இந்த பணத்தையெல்லாம் கடந்த எட்டாண்டு களாக மக்களிடமிருந்து பறித்து மோடி யாரிடம் கொடுத்தார் என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும் அல்லவா? இந்த வழிப்பறிக் கொள்ளை யைத்தான் ராகுல் காந்தி ‘கப்பார் சிங் டாக்ஸ்’ என்று வர்ணித்தார். கடந்த எட்டு ஆண்டுகளாக மோடி அரசு இந்த அநியாய வரிவிதிப்பின் மூலம் அள்ளிக் குவித்த பணம் 55 லட்சம் கோடி. இதனால் பல சிறு வியாபாரிகளும், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோரும் முடங்கி விட்டனர். பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்தார்கள். நடுத்தர வர்க்கம் சேமிப்புகளை இழந்தது. வங்கிகளில் தங்க நகைக் கடன்கள் பல மடங்குகள் அதிகரித்தன. நகைகள் பெருமளவில் ஏலம் விடப்பட்டன, விவசாய நிலங்கள், வீட்டு அடமானக் கடன்கள் வராக் கடன்களாக மாறின - இவை அனைத்திற்கும் மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், அநியாய ஜிஎஸ்டி வரி யும்தான் காரணம்.

பன்முனைத் தோல்வி

அடித்தட்டு, நடுத்தட்டு மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் மக்களது வாங்கும் திறன் குறைந்து போனது. நுகர்தல் குறைந்ததால் உற்பத்தி குறைந்தது. நமது பிரதமரின் “உயிர் நண்பர்” டிரம்ப்பினுடைய கைங்கரியத்தால் ஏற்றுமதி தொழிலும் சிதைந்தது. எல்லைகளில் பதற்றம், உள்நாட்டு குழப்பங்கள், குறைந்துவரும் தனியார் முத லீடுகள், பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டம், உற்பத்தி குறைவு, விலைவாசி ஏற்றம் போன்ற பன்முனை தோல்விகளால் நிலைகுலைந்து போயி ருக்கிற மோடி அரசு உயிர் பிழைப்பதற்காக எடுக்கப் பட்ட நடவடிக்கையே இந்த வரிக்குறைப்பு. “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்ற வறட்டு ஜம்பம்தான் இந்த பாராட்டுகளும், வெற்று விளம்பரங்களும்.

வரிக்குறைப்பின் உண்மை முகம்

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. பல சில்லரைக் கடைகளில் விலைக்குறைப்பு இல்லை. வியாபாரிகள் பழைய ஸ்டாக் இருப்பதாக கைவிரிக்கிறார்கள். அது  எப்போது தீரும் என்பதற்கு தெளிவான பதில் இல்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் “ஜாப் ஒர்க்காக” கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு 5% ஆக இருந்த வரி தற்போது 18% ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இது பெரும் நெருக்கடியை உருவாக்கும்.

மாநிலங்களின் மீதான சுமை

“கொள்ளு என்றால் வாயை அகல திறப்பதும், சேணம் என்றால் வாயை இறுக மூடிக்கொள்வதும்” நமது பிரதமரின் இயல்பான குணம். வரி குறைப்புக் கான பெருமை முழுவதும் தனக்கே என்று ஆர்ப்ப ரிக்கும் பிரதமர் வரி குறைப்பினால் ஏற்படும் மொத்த சுமையையும் மாநில அரசுகள் மீது சுமத்தியுள்ளார். இந்த கூடுதல் நிதிச் சுமையால் பல மாநிலங்கள் அன்றாட நடைமுறைச் செலவுக்குக்கூட ஒன்றிய அரசி டம் பிச்சை கேட்கும் நிலைமைக்கு தள்ளப்படு வார்கள். இதற்கான இழப்பீடு பற்றி ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு, கேரளா போன்ற மாநில அரசுகளின் கோரிக்கையைக் காதில் வாங்கக்கூட நிர்மலா சீதாராமன் தயாராக இல்லை. வரி விகிதத்தில் மாற்றங்களைப் பரிந்துரைக்க சில மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் அடங்கிய சிறப்பு குழு உள்ளது (GST rate rationalisation com mittee). ஆனால் இம்முறை இந்த நடைமுறை பின் பற்றப்படாமல் பிரதமர் மோடி, துர்கா பூஜை விழா  காலத்தில் மக்களுக்கு ‘திருவிழா பரிசு’ வழங்குவதாக சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

கொள்ளையும் கூட்டாட்சி அழிப்பும்

மாநில அரசுகளின் மொத்த வருவாயில் ஜிஎஸ்டி  வரியின்மூலம் கிடைக்கும் வருவாய் 41%. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கோடி அளவில் வரிகள் குறைக்கப் பட்டுள்ளதென்றால், வருவாய் இழப்புகளை மாநில அரசுகள் சமாளிக்கக்கூடிய ஏற்பாடுகளையும் ஒன்றிய அரசு செய்து தரவேண்டும் அல்லவா! மாநில அரசுக ளுக்கு சுயமாக வரி விதிக்கும் அதிகாரம் இல்லை. மேற்கு வங்கத்திற்கு குறைந்தபட்சம் ரூ.20,000 கோடி இழப்பு, கேரளாவுக்கு ரூ.50,000 கோடி இழப்பு ஏற்படும் என முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். தமிழக, கர்நாடக, தெலுங்கானா மாநிலங்களும் இத னைப்போன்ற இழப்புகள் ஏற்படும் என எச்சரித்துள் ளன. சமூக நலன், மனிதவள மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்திவரும் இந்த மாநிலங்கள் அவற்றைத் தொடர்வதில் பெரும் சிரமங்களைச் சந்திக்கும்.

நம் ‘தலைவிதி

இதில் முக்கியமான கோணம் - இந்த மாநி லங்கள்தாம் தேசிய வரி வருவாய்க்கு பெரும் பங்கி னைத் தருகின்றன. உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா,  குஜராத் உட்பட பாஜக ஆளும் மாநிலங்கள் ஜிஎஸ்டி  வசூலில் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. ஆதலால் அவர்களுக்கு பாதிப்புகள் குறைவு. அப்படியே குறைந்தாலும் ஒன்றிய அரசின் “கருணை யும், கரிசனமும்” அவர்களுக்கு அதிகம். ஒன்றிய அரசின் தலைமை கணக்காய்வாளர் தெரி வித்துள்ள புள்ளி விவரங்கள் நம்மை அதிர்ச்சியடை யச் செய்கின்றன. உபரி வருவாய் (revenue surplus) உள்ள 16 மாநிலங்களில் உபரி வருவாயில் முதன்மையாக இருப்பது உத்தரப்பிரதேசம். ஆண் டொன்றுக்கு ரூ.37,000 கோடி உபரி வருமானம். உபரியாக வருவாய் பெற்றுள்ள 16 மாநிலங்களில் 10 மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்கள். தேசத்தின் வருவாய் தொகுப்பிற்கு மிகவும் குறைவான பங்களிப்பைத் தரும் உத்தரப் பிரதேசம், ஒடிசா, வரிகளே வசூலிக்காத வட கிழக்கு மாநிலங் கள் உபரி வருவாய் மாநிலங்களாம்! ஆனால் தேசத் தின் வருவாய் தொகுப்பிற்கு (ஏற்றுமதி வரி, கலால், கஸ்டம்ஸ் வரி, வருமான வரி, ஜிஎஸ்டி) அறுபது விழுக்காட்டிற்கும் அதிகமாக பங்களிக்கும் தென் மாநிலங்கள் “வருவாய் பற்றாக்குறை” (revenue deficits) மாநிலங்களாக இருப்பது நம் ‘தலைவிதி’ என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்? நம் அடிமடியில் கைவைத்து தங்களுக்கு வேண்டிய மாநிலங்களுக்கு ஓரவஞ்சகமாக ஒன்றிய அரசு அள்ளிக் கொடுக்கும் இந்த பாரபட்சமான நடவடிக்கை நாளை நமது கூட்டாட்சித் தத்துவத்திற்கே வேட்டு  வைக்கும் என்பதை பிரதமர் மோடி உணரவேண்டும்!