மாநில அரசுகளுக்கு சொந்தமான மின்பகிர்மான டிஸ்காம்களின் நிதி மேம்பாட்டை முன்னேற்றும் நோக்கத்துடன் கொண்டு வரு வதாக கூறப்பட்ட ‘உதய்’ திட்டத்தில் தமிழ்நாடு அரசு தன்னை இணைத்துக் கொள்வதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் மற்றும் இணைந்த பிறகு மூன்றாண்டுகள் (2020 மார்ச் 31) வரையிலான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகத்தின் செயல் அறிக்கை மற்றும் பொது நோக்கு நிலை குறித்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நாட்டில் உள்ள மின் வாரியங்களின் கடன்களை சீரமைப்பதற்காக ‘உதய்’ என்னும் உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா திட்டத்தை கொண்டு வருவதாக ஒன்றிய பாஜக அரசு 2015 ஆம் ஆண்டு நவம்பரில் அறிவித்தது. இந்த திட்டத்தில் தமிழ்நாடு தன்னை இணைத்துக் கொண்டால் 11 ஆயிரம் கோடி அரசுக்கு பயன் கிடைக்கும் என்றும் கிலுகிலுப்பை காட்டியது.
உதய் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 75 விழுக்காடு கடனை ஏற்றுக் கொள்வதற்கு மாறாக 34.38 விழுக்காடு மட்டுமே ஏற்றுக் கொள்ள அன்றைய அதிமுக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதன் விளைவாக ஏற்பட்ட பற்றாக்குறை 30,520 கோடி ரூபாய் கடனை தமிழ்நாடு மின்சார வாரியம் சுமந்தது. அதுமட்டுமல்லாமல் ரூ.9,151 கோடி கூடுதலாக வட்டி சுமையையும் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. உதய் திட்டத்தில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக ஏற்காமல் பகுதி அளவு மட்டுமே கடனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதால் 25 விழுக்காடு கடனை பத்திரங்களாக மாற்றவும் முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் மூலதன கடன் வகைகள் 87 விழுக்காடும் செயல்பாட்டு மூலதன கடன்கள் 190 விழுக்காடும் அதிகரித்தது.
அனைத்து செலவுகளும் பல மடங்கு அதிகரித்ததால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிலுவை கடன்கள் 2015 செப்டம்பர் முதல் 2020 வரை யிலான ஐந்து ஆண்டு காலத்தில் ரூ.81,312 கோடியிலிருந்து ரூ.1,23,896 கோடியாக அதிகரித்து விட்டது. அதாவது , தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலுவை கடன் ஐந்தாண்டு காலத்தில் 42,583 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே சென்றதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வட்டி தொகையைக் கூட கட்ட முடியாமல் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 500 கோடி ரூபாய் அபராத வட்டி மட்டுமே கட்டியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 17 ஆம் ஆண்டு வரைக்கும் ஐந்து ஆண்டுக ளுக்கு 200 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 4 ரூபாய் 99 பைசா சமன்படுத்தப் பட்ட கட்டணத்தில் கொள்முதல் செய்ய தனியார் (அதானி) நிறுவனத்திடம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒப்பந்த காலம் முடிந்தும் மேலும் இரண்டு ஆண்டு காலத்திற்கு செப்டம்பர் 2017 முதல் ஆகஸ்ட் 2019 வரை ஒரு யூனிட் மின்சாரம் 3 ரூபாய் 50 காசு என்ற விகிதத்தில் புதுப்பிப்பதற்கு அதானி நிறுவனம் முன்வந்தும் தமிழ்நாடு மின்வாரியம் நிரா கரித்துள்ளது. இதனால் சுமார் 150 கோடி ரூபாய் கூடுதல் செலவானது. கோவா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைய விருந்த அனல் மின் நிலையத்தில் இருந்தும் ஒரு யூனிட் 3 ரூபாய் 17 பைசா வுக்கு ஒப்பந்தம் செய்வதாக கூறிய தமிழ்நாடு மின்சார வாரியம், அவசர அவசரமாக அன்றைய சந்தை மதிப்பு ஒரு யூனிட் 4 ரூபாய் 10 பைசா முதல் ஐந்து ரூபாய் 45 பைசா வரைக்கும் மின்சாரம் பரிமாற்ற சந்தை மூலம் மின்சாரம் கொள் முதல் செய்ததால் கடனை மேலும் அதிகரிக்க செய்தது.
ஜெயலலிதா எதிர்ப்பு
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த உதய் மின் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் கடுமையாக எதிர்த்தார். பின்னர், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார். மின்கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சலுகைகளை கோரியிருந்தார். ஆனாலும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. மாநில அரசு ஏற்கும் 75 விழுக்காடு கடனில் 25 விழுக் காடு ஒன்றிய அரசு மானியமாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இதற்கும் அன்றைக்கு பதில் கிடைக்கவில்லை. இதனால் அவர் முதலமைச்சராக இருந்த காலம் வரைக்கும் இந்த திட்டத்தில் தமிழ்நாட்டை இணைத்துக் கொள்ளவில்லை. இருந்தும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பச்சைக் கொடி காட்டியது. 2017 ஜனவரி 9ஆம் தேதி தில்லிக்கே பறந்து சென்ற அன்றைய மின் துறை அமைச்சர் தங்கமணி, உதய் திட்டத்தில் தமிழ்நாட்டை இணைத்துக் கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டார்.
உதய் மின் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு நிதி மிச்சமாகும் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்ததில் துளியும் உண்மை இல்லை. என்று 5 ஆண்டுக்கு முன்பே தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு விடுத்த எச்சரிக்கை இன்றைக்கு நிரூபணமாகி இருக்கிறது. அனைவருக்கும் வாங்கக்கூடிய விலையில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வழி வகை செய்யும் திட்டம் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அனைத்து விவசாய நுகர்வோருக்கும் மீட்டர் பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. குறிப்பாக, விவசாயத்திற்கு பயன்படுத்தும் மின்சாரம் ஒரு யூனிட் 3 ரூபாய் 22 பைசா கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று 2014 டிசம்பர் மாதமும் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அது போலவே ஜூன் மாதம் 2012 க்குள் அனைத்து குடிசை மின் இணைப்புக ளுக்கு (ஒரு விளக்கு திட்டம்) மீட்டர் பொருத்த வேண்டும் என்றும் ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் 95 பைசா அல்லது ஒரு மாதத்திற்கு 145 ரூபாய் என கட்டணம் நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2020 மார்ச் மாதம் வரைக்கும் 14 லட்சத்து 36 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளுக்கும் அரசாங்கம் மீட்டர்களை பொருத்தியிருக்கிறது. இந்தப் பணி இன்னமும் 33 சதவீதம் மட்டுமே மீதம் இருக்கிறது. அதேபோல் ஒரு விளக்கு திட்டத்தில் 8.62 லட்சம் குடிசை இணைப்புகளில் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்படுத்தும் பம்பு செட்டுகளுக்கும் குடிசையில் வசிக்கும் ஏழைகளுக்கு ஒரு விளக்கு திட்டமும் இலவசமாக மாநில அரசு நடைமுறைப் படுத்தி வருவதால் விவசாயிகளும் ஏழைகளும் செலுத்த வேண்டிய முழு கட்டணத் தையும் மாநில அரசிடமிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் மானியமாக வசூலித்து வருகிறது.
மாநில அரசின் மானியம் உதவித்தொகை நிறுத்தப்பட்டால் அடுத்த நிமிடமே ஏழைகளில் ஒரு விளக்கு மின் திட்டமும், விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் திட்டமும் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்பட்டு கட்டணம் கட்ட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. இதற்குக் காரணம், முந்தைய அதிமுக ஆட்சியின் தவறான கொள்கை முடிவு, நிர்வாகத் திறமையின்மை, மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் தங்களது லாப வெறி வேட்டைக்காக தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்தது. இதனால், 2018-19 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு 25 விழுக்காடாக இருந்தது (ரூ.3,156 கோடி). அந்தத் தொகையை அன்றைய அரசு ஏற்றுக் கொள்ளாததால் 2020 - 21 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் சுமை மேலும் 25 விழுக்காடு அதிகரித்து 50 விழுக்காடாக உயர வழி வகுத்தது. அது மட்டுமின்றி, மின்வாரியத்தின் இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடமையிலிருந்து அதிமுக அரசு பின்வாங்கியது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல்பாட்டு மூலதன தேவை 188 விழுக்காடு ரூ.16,075.19 கோடி அதிகரிக்க செய்ததையும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கையில் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது.
சி.ஸ்ரீராமுலு