தீபாவளியும் மூச்சுத்திணறலும் எளிய பாதுகாப்பு வழிமுறைகள்
கடலூர், அக்.15- அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சுற்றுச்சூழலில் உள்ள மாசு மற்றும் தூசிகள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் காற்று மண்டலத்திலேயே கலந்திருக்கும். அதனால் இந்த குளிர்காலங்களில் மூச்சுத்திணறல் பிரச்சனைகள் அதிகமாக வெளிப்படுகின்றன. குறிப்பாக தீபாவளியின்போது பட்டாசு புகையால் மூச்சுத்திணறல் பிரச்சனைகள் மேலும் மோசமடையக்கூடும். தீபாவளிக்கு முந்தைய நாட்களில் வீட்டை சுத்தம் செய்யும்போது மூச்சுத்திணறல் உள்ளவர்கள் அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பட்டாசு வகைகள் புஸ்வானம், சாட்டை, பாம்பு டேப்லட், 10000 வாலா போன்ற அதிகமாக புகை வெளிப்படும் பட்டாசுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நலம். இவற்றில் சல்பர் டை ஆக்சைடு, அலுமினியம் ஆக்சைடு, காட்மியம், கார்பன் மோனாக்சைடு, பேரியம், மாங்கனீசு போன்ற நச்சுப் பொருள்கள் அளவுக்கதிகமாக உள்ளன. மேலும் சரவெடிகளை காற்றோட்டமான பகுதிகளில் மட்டுமே வெடிக்கச் செய்தல் நலம். உணவுமுறை மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பவர்கள் எண்ணெய் பலகாரங்களை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. அதிக எண்ணெய் மற்றும் காரவகை பலகாரங்கள் மூலமும் ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் அதிகரிக்கலாம். கூட்ட நெரிசல் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் தீபாவளி நாட்களில் வெளியே செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான துணிக்கடை, வணிக வளாகங்களை தவிர்க்க வேண்டும். இச்சமயத்தில் எச்1என்1 பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயமும் அதிகம். மருந்து தயார்நிலை ஆஸ்துமாவிற்கு பயன்படுத்தும் வழக்கமான மருந்துகள், இன்ஹேலர்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். தீபாவளி அன்று பெரும்பாலான மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் மூடியே இருக்கும். முதலுதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைகளை உடனடியாக அணுகவும். உங்கள் சுற்றத்தாரின் நலன் கருதி இந்த வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
