பரசலூரில் கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
மயிலாடுதுறை, அக். 12- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பரசலூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் இழிவுபடுத்தும் பொருள் தரும் சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள், தெருக்கள், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களின் பெயரை மாற்றுதல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட 19 கூட்டப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, அவர்களின் சேவைகளை போற்றும் வகையில் கௌரவித்தனர். இக்கூட்டத்தில், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சீனிவாசன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு துறை) சுகுமாரன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, சுமதி, ஊராட்சி தனி அலுவலர் மனோகர் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் முன்னாள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
