ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
சென்னை: அறிக்கை தாக்கல் செய்யத் தவறிய நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கிலேயே, தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதில், 2017 முதல் இதுவரை குள்ளஞ்சாவடி ஆய்வாளர்களாக பணியாற்றிய 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தியபடி, புகாரை முடித்து வைப்பதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தர வேண்டும். புகாரை விசாரித்த குற்றப்பத்திரிகையோ அல்லது அறிக்கையோ தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்
சென்னை: இணையம் சார்ந்த உணவு விநியோக ஊழியர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக நல வாரியம் அமைத்து அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. கடந்த பட்ஜெட்டில் இதுதொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகள் வழங்கப்பட்டன. அதன்படி இணையம் சார்ந்த ஊழியர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தற்போது மற்றொரு திட்டத்துக்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2000 உணவு விநியோக ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூபாய் 20 ஆயிரம் மானியம் வழங்க ரூபாய் 4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த முன்முயற்சி உணவு வினியோக ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாகும்.
அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி
சென்னை: ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என அண்ணாமலை தவறான தகவலைக் கூறுகிறார் என அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், சந்தேகம் இருந்தால் அண்ணாமலை நேரில் வந்து ஆய்வு செய்யட்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். அண்ணாமலையின் அறிக்கை மக்களிடையே அவசியமற்ற பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கும் அமைச்சர், திட்டத்தின் முறையான செயல்பாட்டை, அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
ரூ.2 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூரில் கோயிலுக்குச் சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அதிகாரிகள் அகற்றி நிலங்களை மீட்டனர். இந்த நடவடிக்கையானது, கோவில் சொத்துக்களை பாதுகாக்கும் திசையில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாகும். நீண்டகாலமாக ஆக்கிரமிப்பில் இருந்த இந்த விலை உயர்ந்த நிலங்களை மீட்பது கோவில் நிர்வாகத்துக்கும், பக்தர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.
உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை: கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் நீதிமன்றத்தை நாடச் செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியே விழாச் செலவுகளை ஏற்க வேண்டி வரும் என்றும் திருவிழாவிற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை 7 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரேமலதா கட்டுப்பாடு
சென்னை: தங்களைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சி மட்டும் படத்தை பயன்படுத்தலாம் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ
சென்னை: புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர்மன்ற தலைவருமான கார்த்திக் வி.ஆர். தொண்டைமான், அதிமுகவில் இருந்து விலகி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்தது குறித்து கார்த்திக் தொண்டைமான் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “அதிமுகவில் மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக கட்சி போகிற போக்கே சரியில்லை” என்று தெரிவித்தார். முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ். ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே. செல்லபாண்டியன், திமுக அயலக அணி மாநிலச் செயலாளர் எம்.எம். அப்துல்லா, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.