tamilnadu

img

நெல் மூட்டைகள் சேதம் : கொள்முதலில் தேக்கம், டெல்டாவில் தொடரும் சோகம்

நெல் மூட்டைகள் சேதம்  கொள்முதலில் தேக்கம் டெல்டாவில் தொடரும் சோகம்

ஆரூரான் டெல்டா விவசாயிகள் நெற்பயிரை விளைவித்து விலைக்கு விற்கும் முன்பாக படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. வறட்சி, மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பிரச்சனைகள் மட்டுமல்ல; போதிய வசதிகளை அரசு ஏற்படுத்தித் தராத செயற்கைப் பிரச்சனைகளாலும் விவசாயிகள் படும் துயரம் அதிகமாகத் தொடர்கிறது. இந்தத் துயரத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டு வருவதாக ஒவ்வொரு ஆண்டும் அரசு தரப்பில் ஆறுதல் வார்த்தைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், விவ சாயிகளின் துயரம் தொடர்கதையாக உள்ளது. கடந்த 2ஆம் தேதி, டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக சேமிப்புக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், களநிலவரம் வேறுமாதிரியாக உள்ளது. விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. சாக்குகள் பற்றாக்குறை, லாரிகள் உடனுக்குடன் செல்லாத நிலைமை என பல்வேறு காரணங்களால் இந்த வேதனை தொடர்ந்தபடி இருக்கிறது. இத்தகைய சூழலில், மழைப் பொழிவும் தொடங்கி கூடுதல் வேதனையை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. குடோன்கள் பற்றாக்குறை டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு இலக்கை மிஞ்சி 6 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடந்துள்ளது. இதில் 4 லட்சம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 லட்சம் ஏக்கரில் அறுவடைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுவரை 9 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மீதம் 3 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்குப் போதுமான குடோன்கள் இல்லை என்று விவசாயிகளும் கொள்முதல் நிலைய ஊழியர்களும் தெரிவிக்கின்றனர். இதனால், கொள்முதல் பணிகள் தேக்கமடைந்துள்ளன. பல இடங்களில் திறந்தவெளி குடோன்கள் அமைக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அங்கு அடுக்குவது வழக்கமாக இருந்தது. நடப்பாண்டில் திறந்தவெளி குடோன்கள் அமைக்க அரசு அனுமதி தரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், நெல் கொள்முதல் செய்வதில் கடும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. மெத்தனம் கூடாது நெல்லை இயக்கம் செய்வதற்குப் போதுமான லாரி வசதிகள் இல்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இலக்கை மிஞ்சி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான சாக்குகளும் கையிருப்பில் இல்லை என்று கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இப்படித் தாமதமாக உணர்ந்த அரசு இப்போது சில மாவட்டங்களில் திறந்தவெளி கூடங்களை அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திறந்தவெளி குடோன்கள் அமைக்கப்படும் வரை நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதும் தெரிகிறது. அரசின் மெத்தனப் போக்கு காரணமாக இந்தத் தேக்கநிலையைச் சரிசெய்ய குறைந்தது பத்து நாட்களாவது ஆகும் என்கின்றனர் விவசாயிகள். மழையில் நனைந்த நெல் மூட்டைகள் திருவாரூர்,நாகை மாவட்டங்களில் தெற்குப் பகுதிகளில் சமீபத்தில் அதிகாலை இடி மின்னலுடன் பெய்த கனமழையால், சாலையில் காயவைத்த நெல் குவியல்கள், கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள உதயமார்த்தாண்டபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 5,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமடைந்துள்ளன. “மழை வாய்ப்பு இருப்பதை அறிந்து முன்னதாகவே நெல் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு வந்திருந்தும் கொள்முதல் தாமதமானதால் நெல் மூட்டைகள் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளன” என்று விவசாயிகள் வேதனையடைகின்றனர். சிக்கல் தீர்வது எப்போது? காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆறு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடைப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், இதற்காக தஞ்சாவூரில் 187, திருவாரூரில் 382, நாகப்பட்டினத்தில் 89, மயிலாடுதுறையில் 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையால், விவசாயிகள் அறுவடை செய்து கொள்முதலுக்காகச் சாலைகளில் குவித்து வைத்துள்ள நெல்மணிகள் நனைந்து முளைக்கும் அபாயத்தில் உள்ளன. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லைக் கொள்முதல் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில்  திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள தேக்கம், உடனுக்குடன் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யாத தாமதம் ஆகியவற்றால் விவசாயிகள் படும் துயரங்கள் குறித்து விரிவான முறையில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.  உடனடியாக அரசு இத்தகைய நிலைமைகளை மாற்றி விவசாயிகளின் அவலங்களைப் போக்கிட வேண்டும் என்று அவர் தன் பேட்டியில் முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த நிலைமைகளை விரைவில் போக்குவதற்குத் தமிழ்நாடு அரசு தீவிரமாகக் கவனம் செலுத்திட வேண்டும். ஏற்கெனவே சில நாட்களாகப் பெய்த மழையில் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ள நிலையில்,அடுத்து வரும் மழை நாட்களில் பெரியளவில் மழை பெய்தால், நெல்லுக்கு ஏற்படும் பாதிப்பும் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பும் மதிப்பிட முடியாத அளவிற்கு அதிகரிக்கும். இதை தமிழ்நாடு அரசு புரிந்துகொண்டு, மிகத் தீவிரமான முறையில் இந்தப் பிரச்சனையில் தலையிட்டுத் தீர்வினை எட்டிட வேண்டும்.இதுவே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.