சென்னை, மார்ச் 15 - பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை அகற்றும் சட்டத்திருத்தத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மார்ச் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெற்று வருகிறது. மார்ச் 15 அன்று கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே அண்மை காலத்தில் முரண்பாடு முன்னுக்கு வருவதைத் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காணமுடிகிறது. புதுச் சேரி கடந்த காலத்தில் இதனைக் கடுமையாக சந்தி த்தது. குறிப்பாக, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், மாநில அரசு உருவாக்குகிற சட்டம் அல்லது சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்து ஒன்றிய அர சுக்கு அனுப்பாமல் முடக்குதல் போன்ற நட வடிக்கைகளில் இந்த முரண்பாடு பிரதிபலித்து வருகிறது. அதிமுக ஆட்சியின் போது, கட்சிக்குள் எழுந்த பிரச்சனைகளில் ஆளுநர் தலையிட்டு, ஒன்றிய ஆளும் கட்சியின் முகவர் போல செயல்பட்டது இப்போக்கின் உச்சகட்ட வெளிப்பாடு. பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்படும் போது அல்லது கவிழ்க்கப்படும் போது ஆளுநர்களை ஒன்றிய அரசு அப்பட்ட மாகப் பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தற்போது தமிழ்நாடு ஆளுநர், தென்மண்டல துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை மிகுந்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நீட் தேர்வு எதிர்ப்பு சூழலில் கல்வி மாநில பட்டிய லுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தம் பெற்றுள்ள நிலையில், மாநில நிலைபாட்டுக்கும், நலனுக்கும் எதிராக ஆளுநர் பேசியிருக்கிறார். அதே போல், மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்று அரசியல் சாசனம் குறிப்பிடுவதில் பிரதி பலிக்கும் பன்மைத்துவம் மற்றும் கூட்டாட்சி கோட் பாட்டைத் தளர்த்தும் விதமாக, மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை சிதைக்கும் விதமாக, இது இயல்பான ஒன்றிணைப்பு (Organic union) என்றும், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரு முனையிலிருந்து மறு முனை வரை கலாச்சார ஆன்மீக மாண்புகளின் அடிப்படையில் நீடித்து வந்துள்ளது என்றும் பேசியுள்ளார். இத்தகைய பேச்சு உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல,
ஆர். எஸ்.எஸ்.சின் சித்தாந்த குரல் என்பதோடு, ஆளுநரின் அதிகார வரம்பைத் தாண்டியதாகவே கருத முடியும். இது கண்டிக்கத்தக்கது. வேந்தராக இருந்து துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் மாநில சட்டத்தின் கீழ் ஆளுநருக்கு அளிக்கப்படுவதே. மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டத் திருத்தத்தின் மூலம் அந்த அதிகாரம் ஆளுநரிடமிருந்து அகற்றப் பட்டுள்ளது. தமிழகத்திலும் இதனைப் பரிசீலித்து, சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து, ஆளுநர் அதிகாரத்தை அகற்ற வேண்டும் என தமிழக அரசை மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. ஆளுநர் பதவி தேவையற்றது என்பது துவக்கத்திலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. தற்போதைய சூழலில் இந்த விவாதம், ஒன்றிய, மாநில உறவுகள் சீரமைப்பு என்ற சட்டகத்தின் பின்புலத்தில் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவரை ஆளுநர் நியமனம் அரசியல் நியமனமாக இருக்கக் கூடாது என்பதோடு, நியமனம், மாற்றம் அனைத் தும் மாநில அரசாங்கங்களின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும் என்பதை இம்மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
பல்கலைக்கழகங்களில் அவுட்சோர்சிங்-ஐ கைவிடுக!
சென்னை அண்ணா பல்கலைக் கழகம் தமிழகத்தில் பாரம்பரியமான தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகும். இதன் வளர்ச்சி உலகப் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் கூட்டான பயிற்சி வகுப்புகளை நடத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் நிதிப்பற்றாக்குறை என்ற பெயரில் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத தொழில்நுட்ப ஊழியர்களை அவுட்சோர்சிங் முறை யில் தனியாரிடம் ஒப்படைக்க பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. 10 முதல் 17 ஆண்டுகள் பணி புரிந்து வரும் சுமார் 500 ஊழியர்கள் பல்கலைக் கழகத்தின் மேற்படி முடிவு காரணமாக வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இவர்களில் பெரும் பான்மையோர் பி.இ., போன்ற பட்டம் பெற்ற வர்கள். இனி வெளியில் வேறு வேலைகளை தேடும் வாய்ப்பு இல்லை. எனவே பல்கலைக் கழகம் மேற்படி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும்.