tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

சிபிஎம் ரசீது வழங்கும் பேரவை

திருவாரூர், ஆக. 24-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட கிளை இடைக்கமிட்டி கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கும் பேரவை திருவாரூரில் நடைபெற்றது. கட்சி உறுப்பினர்களுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி, பா.கோமதி ஆகியோர் ரசீது வழங்கினர். மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், நகரச் செயலாளர் எம்.டி. கேசவராஜ், ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா மற்றும் நகர, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரசீதை பெற்றுக்கொண்டனர்.

திருவட்டாரில் அலுவலர்கள் பட்டறிவு பயணம்

திருவட்டார், ஆக.23- திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் அடங்கிய 60 அலுவலர்கள் மூன்று நாட்கள் பட்டறிவு பயணமாக கன்னியாகுமரி, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு வந்தனர்.   கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஒன்றியம்  அருவிக்கரை கிராம ஊராட்சியில் உள்ள மாத்தூர் தொட்டி பாலம், சிறுவர் பூங்கா கட்டுமானப் பணி, பரளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் ஊராட்சியின் நாற்றங்கால் பண்ணை ஆகியவற்றை பார்வையிட்டனர்.  அருவிக்கரை ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும், கிராம ஊராட்சியின் சொந்த நிதி ஆதாரம் மற்றும் மக்களின் வேலைவாய்ப்பு பற்றி அருவிக்கரை கிராம ஊராட்சி செயலர் ராஜன்   மற்றும் திருவட்டார் வட்டார வள பயிற்றுநர்  ஆகியோர் விளக்கிக் கூறினர். திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர் சசி,   மண்டல துணை வட்டார வளர்சி அலுவலர்  சைலன், வட்டார ஒருங்கிணைப்பாளர் அனுஷா மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து  கொண்டனர் .

சுசீந்திரத்தில் உழவரைத் தேடி முகாம்

நாகர்கோவில், ஆக.24- கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் சுசீந்திரம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்ட முகாம் நடைபெற்றது.  வேளாண்மை துணை இயக்குனர் கீதா தலைமை வகித்து வேளாண் வணிகம் சார்ந்த திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுனில்தத் விளக்கிப் பேசினார்.