கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 12- திருச்சியில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகள், பதாகைகளை திருச்சி மாவட்ட நிர்வாகம் அகற்றி வருகிறது. இதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடிக்கம்பங்களை அகற்றக்கூடாது எனக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் திருவெறும்பூர், எஸ்ஐடி உள்ளிட்ட பகுதியில் இருந்த கல்வெட்டுக்கள், கொடிக் கம்பங்களை வியாழனன்று அகற்றினர். வெள்ளியன்று செந்தண்ணீர்புரத்தில் உள்ள சிபிஎம் கொடிக் கம்பங்களை அகற்ற முயன்றனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, இதுகுறித்து வழக்கு தொடுத்துள்ளோம். வழக்கின் தீர்ப்பு வரும் வரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என கூறினர். அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கொடிகம்பங்களை அகற்ற வந்துள்ளோம். எனவே, நீங்கள் அதிகாரிகளிடம் கூறுங்கள் என நெடுஞ்சாலை துறையினர் கூறினர். இதையடுத்து மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் தலைமையில், திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு வந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலேயே கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்படுகின்றன என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்து புறப்பட்டுச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், கார்த்திகேயன், ரேணுகா, ரெங்கராஜன், பகுதிச் செயலாளர் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், விஜயேந்திரன், தர்மா, ரபீக் அகமது, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வேலுசாமி, சரஸ்வதி, சேதுபதி, சீத்தா, சிஐடியு நிர்வாகிகள் மணிகண்டன், கணேசன், சார்லஸ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து, மாவட்ட ஆட்சியர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். “உயர்நீதிமன்ற உத்தரவின்படி கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகிறது. உங்களுக்கு நான்கு தினங்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் நீங்கள் உயர்நீதிமன்றத்தில் கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தடை உத்தரவு பெற்று வாருங்கள். அதுவரை கொடிக்கம்பங்கள் அகற்றும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கிறோம்’’ என்றார். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.