சிபிஎம் போராட்டம் வெற்றி
நெடுஞ்சாலைத்துறை அகற்றிய கொடிக் கம்பம் மீண்டும் நடப்பட்டது
பெரம்பலூர், ஆக. 26- பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம், பாடலூர் ஊராட்சியில் ஊட்டத்தூர் பிரிவு சாலை ஒரமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், மாதர் சங்கம் கொடி கம்பங்கள் இருந்தன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடிக் கம்பத்தை தேசிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் அகற்றி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கொடிக் கம்பம் அகற்றப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் தேவராஜ், ஒன்றியச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் மாவட்டச் செயலாளர் பெ.ரமேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் நிர்வாகிகள் நூறுக்கும் மேற்பட்டடோர் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்யும் நிறுவன அதிகாரிகளை முற்றுகையிட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர், ஆலத்தூர் வட்டாட்சியர் ஆகியோர் இப்பிரச்சனையில் தலையீடு செய்து பாடலூர் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி, கொடிக் கம்பத்தை அகற்றிய நிறுவனத்தின் ஊழியர்களே கொடிக் கம்பத்தை அதே இடத்தில் மீண்டும் நடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். கொடிக் கம்பம் அதே இடத்தில் மீண்டும் நடப்பட்ட பிறகு, அங்கிருந்து கட்சி, வாலிபர், மாணவர் சங்க நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.