பட்டாசு விபத்தில் பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்
விருதுநகர், ஜூலை 3 - விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சின்னக் காமன்பட்டியில் அமைந்துள்ள கோகுலேஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 4 தொழிலாளர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையிலான கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காயமடைந்த தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த கே. பாலபாரதி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். “இந்த கோரமான வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தது பெரும் துயரமாகும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கட்சியின் சார்பில் ஆறுதல் தெரிவிக்கிறோம். கடந்த 2 நாட்களாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்றார். நிவாரண நிதி தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ. 5.50 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் இதுபோன்ற விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பல ஆய்வுகளின் அடிப்படையில் இது போன்ற விபத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும் என கூறியுள்ளது. “இந்த வழிகாட்டுதல்கள் இருந்தும் வெறும் ரூ. 5.50 லட்சம் வழங்குவது போதுமானதாக இல்லை” என்று கே. பாலபாரதி தெரிவித்தார். பாதிக்கப்பட்டோரின் நிலை இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் டிப்ளோமா இன்ஜினீயரிங் முடித்த ஒரு இளைஞர் வேலையின்மை காரணமாக பட்டாசு ஆலையில் வேலைக்கு சென்று உயிரிழந்துள்ளார். மேலும் கணவன் மனைவி இருவரும் அந்த ஆலையில் வேலைக்கு சென்றுள்ளனர். அவர்களில் மனைவி உயிரிழந்துள்ளார். கணவர் தப்பியுள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். “வறுமையில் உள்ள இந்த குடும்பங்களுக்கு பட்டாசுத் தொழில் மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. சிவகாசியில் மாதா மாதம் இதுபோன்ற விபத்துகள் நடந்து கொண்டே உள்ளது” என்று கே. பாலபாரதி கவலை தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை மாநில அரசு பட்டாசுத் தொழிலுக்கு அனுமதி வழங்கும் போதே விபத்து நடைபெற்றால் குறிப்பிட்ட தொகையை நிவாரணமாக வழங்க வேண்டும் என்பதை விதியாக சேர்க்க வேண்டும் என்று கே. பாலபாரதி கோரிக்கை விடுத்தார். “சிவகாசி பகுதியை தமிழக முதல்வர் கூடுதல் கவனம் செலுத்தி பார்க்க வேண்டும். பசுமை தீர்ப்பாயம் வழங்கிய வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும்” என்றார். கோரிக்கைகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகம் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ள தலா ரூ. 10.50 லட்சத்தை வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது, சிபிஎம் மாவட்டச் செயலாளர் அ. குருசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம். முத்துக்குமார், எம். மகாலட்சுமி, கே. முருகன், எல். முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சி. பாண்டியன், ஆர். முத்துவேலு, ஆர். சுரேஷ்குமார், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.