tamilnadu

ரேஷன் கடையை உடனே செயல்பாட்டுக்கு கொண்டுவர சிபிஎம் கோரிக்கை

ரேஷன் கடையை உடனே செயல்பாட்டுக்கு  கொண்டுவர சிபிஎம் கோரிக்கை

கும்பகோணம், செப். 25- 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் கிளை சார்பாக உள்ளூர் ஊராட்சி மக்கள் பிரச்சனை சம்பந்தமாக விண்ணப்பம் தயாரித்து, பகுதி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. 
அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது: 
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் உள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்தம் நகர், ராஜா நகர் பகுதிகளில் கும்பகோணம் உள்ளூர் ஊராட்சி மன்றத்திற்கு அருகில் உள்ள ரேஷன் கடையில், 1500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகிறார்கள். ஆனால் அந்த ரேஷன் கடையில் எந்த நேரமும் கூட்ட நெரிசல் இருந்து வந்தது.
இந்த கூட்ட நெரிசலை குறைக்க வேண்டி புதியதாக ஸ்ரீராம் நகரில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில், புதிய ரேஷன் கடை சுட்டிடம் கட்டி திறக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை பயன்பாட்டுக்கு அந்த ரேஷன் கடை கொண்டு வராமல் உள்ளது. இதை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, பொதுமக்கள் சிரமங்களை தீர்த்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்தம் நகர் மற்றும் கோமளவல்லி நகரில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சுமார் 200 மீட்டர் சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. அந்த சாலையை முழுமையாக தார்சாலையாக மாற்றி உதவிட கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல், பாதாள சாக்கடை திட்டம் இல்லாமல் பலர் நேரடியாக கழிவுகளை வாய்க்காலில் விட்டு சுகாதார கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வாக அப்பகுதிக்கு புதை சாக்கடை திட்டம் கொண்டு வந்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மனுவை அதிகாரியிடம் வழங்கும்போது, சிபிஎம் கிளைச்செயலாளர் கே. ராமமூர்த்தி, கிளை உறுப்பினர்கள் உடன் இருந்தனர். 
மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை எனில் மக்களைத் திரட்டி ஜனநாயக முறையில் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.