வடகிழக்கு பருவமழைக்கான கட்டுப்பாட்டு அறை திறப்பு: தஞ்சை மாநகராட்சி மேயர் தகவல்
தஞ்சாவூர், அக். 18-   தஞ்சாவூர் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழைக்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, பொதுமக்களுக்குத் தேவையான அவசர உதவிகள் 24 மணி நேரமும் வழங்க மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது என மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட மேயர் சண்.ராமநாதன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள இந்த நேரத்தில், மழையினால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தி மழைநீர் வடிய வைக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 51 வார்டுகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான மழைக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்புகளை வழங்க, 25 பேர் கொண்ட சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 18004251100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மழையினால் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்க வேண்டும். மழைக்காலங்களில் மரங்கள் முறிந்து விழுந்தால் அதை அகற்ற மரம் வெட்டும் கருவிகளும், ஜேசிபி, கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் உள்ளிட்டவைகளும், பேரிடர் மீட்புக் கருவிகளும் மாநகராட்சியில் தயார் நிலையில் உள்ளன’’ என்றார். அப்போது, மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
 
 
                                    