tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

ஒப்பந்தத் தொழிலாளர் கோரிக்கைகள்: பிரச்சாரம் நடத்த சிஐடியு முடிவு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 12-  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில், தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.  மாநில முடிவுகளை விளக்கி சிஐடியு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் பேசினார். வேலை அறிக்கையை வட்டச் செயலாளர் பழனியாண்டி வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை வட்ட பொருளாளர் இருதயராஜ் சமர்ப்பித்தார். கூட்டத்தில், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட  பல்வேறு கோரிக்கைகளை ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரியும் இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் நடத்துவது, 19 ஆம் தேதி நடைபெறும் மாநில தழுவிய ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு திருச்சியில் தென்னூர், மணப்பாறை, துறையூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பெருமளவில் பங்கேற்பது.  ஆகஸ்ட் 8, 9, 10 ஆம் தேதிகளில் கடலூரில் நடைபெறும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் 18 ஆவது மாநில மாநாட்டில் 500 பேர் கலந்து கொள்வது  என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

தஞ்சாவூர், ஜூலை 12-  தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர் நிலை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் இடமாற்றம் செய்து வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். கும்பகோணம் ஆலய நிலங்கள் முன்னாள் தனி வட்டாட்சியர் எஸ். செந்தில்குமார், திருவோணம் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஆர். செல்வம் தஞ்சாவூர் வரவேற்பு பிரிவு தனி வட்டாட்சியராகவும், வரவேற்பு பிரிவு தனி வட்டாட்சியர் ஏ. மூர்த்தி பட்டுக்கோட்டை முத்திரக் கட்டண தனி வட்டாட்சியராகவும், பட்டுக்கோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சு. தரணிகா பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், திருவோணம் வட்ட சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஜி. சாந்தகுமார் பட்டுக்கோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், பட்டுக்கோட்டை முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியர் எம். பழனியப்பா தஞ்சாவூர் வக்பு வாரிய தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை  விரைந்து நிறைவேற்ற சிபிஐ கோரிக்கை

புதுக்கோட்டை, ஜூலை 12-  காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை அக்கட்சியின் 16 ஆவது மாவட்ட மாநாட்டுப் பேரணி மற்றும் பொது மாநாடு நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய அரசு மீண்டும் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை உருவாக்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பேரணி பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திலகர் திடலை அடைந்தது.  அங்கு நடைபெற்ற கட்சியின் நூற்றாண்டு விழாப் பொது மாநாட்டுக்கு, மாவட்டச் செயலர் த. செங்கோடன் தலைமை வகித்தார். கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் திருச்சி எம்.செல்வராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் வை.சிவபுண்ணியம், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் க.மாரிமுத்து எம்எல்ஏ, டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், இந்திய கம்யூ. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீ.மூ. வளத்தான் உள்ளிட்டோர் பேசினர்.

விடுதலைச் சிறுத்தைகள்  கட்சி நிர்வாகி மீது தாக்குதல் 

தஞ்சாவூர், ஜூலை 12-  வல்லத்தில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகியை வழிமறித்து தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை அருகே, வல்லம் அரசு உயர்நிலைப்பள்ளி சாலையைச் சேர்ந்தவர் சங்கர்(42). விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தஞ்சை மாவட்ட ஒன்றிய துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், சங்கர் தன்னுடைய பைக்கில் வல்லம் - தஞ்சை சாலையில் உள்ள ஒரு கடைக்கு பெயிண்ட் வாங்கச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரில் இருந்து இறங்கிய வல்லத்தை சேர்ந்த மதியழகன், அவருடைய மகன்கள் பார்த்திபன், திருமாவளவன் ஆகிய 3 பேரும் சங்கரின் பைக்கை வழிமறித்து நிறுத்தி உள்ளனர். சங்கர் பைக்கை நிறுத்திய உடன் மதியழகன் உட்பட 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். சுதாரித்துக் கொண்ட சங்கர், அலறிக் கொண்டே அங்கிருந்து தப்பியோடி உள்ளார். சங்கரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் மதியழகன் உட்பட 3 பேரும் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். தொடர்ந்து, பொதுமக்கள் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, சங்கர் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் காவல்துறையினர் மதியழகன் உட்பட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.