கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம்
நாகப்பட்டினம், ஜூலை 31- நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் கிராமத்தில் வெண்ணிலா என்ற பெண் மர்மமான முறையில் இறந்ததால், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 26.06.25 அன்று ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எனினும் ஒருமாத காலம் கடந்துவிட்ட நிலையில், கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கையை வெளியிட வலியுறுத்தியும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தியும் ஜூலை 31 அன்று, வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தொடர் உண்ணாவிரத போராட்டம் மாவட்டச் செயலாளர் டி.லதா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், வட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், பேச்சுவார்த்தைக்குச் சென்ற ஜனநாயக மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகளை, ஒருமையில் அவமானப்படுத்தும் வகையில், கோட்டாட்சியர் தம் அதிகார வரம்பை மீறி பேசினார். உடனடியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து சாலைமறியல் நடைபெற்றது. அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.