tamilnadu

கட்டுமான நல வாரிய நிதி தப்புமா - டி.குமார்

கட்டுமான நல வாரிய நிதி தப்புமா?  

தமிழகக் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் நிதியை அரசின் பொதுத் திட்டங்களுக்காக மடைமாற்றம் செய்யும் போக்கு குறித்து சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. வாரிய நிதியைக் கொண்டு தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவது, தொழிலாளர்களுக்குப் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.  அக்டோபர் 03 அன்று நடைபெற்ற வாரியக் கூட்டத்தில், 17,03,134 கட்டுமானத் தொழிலாளர்களை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கான ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து மக்களுக்கும் அரசு காப்பீட்டுத் தொகையைச் செலுத்தும் நிலையில், இங்கு வாரிய நிதியிலிருந்து ₹267 கோடியை பிரீமியமாகச் செலுத்த அரசாணை (நிலை) எண் 75, நாள் 22/07/2025-ன்படி முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் வாரியப் பணத்தை மடைமாற்றம் செய்வதாகும்.  மொத்தம் 19 வாரியங்கள் உள்ளன. வாரியங்களின் நிதி மடைமாற்றம் இதோடு நிற்கவில்லை. அரசின் பிற திட்டங்களான கலைஞர் கைவினைத் திட்டம் (₹45.21 கோடி), அம்மா உணவகம் (₹1.5 கோடி), அரசு இலவச வீடு திட்டம் (₹100 கோடி), தேசிய மருத்துவத் திட்டம் (₹266.64 கோடி) ஆகியவற்றுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. இவற்றைத் தவிர்த்து, நடமாடும் மருத்துவத் திட்டம் (₹13 கோடி), சென்சஸ் கணக்கெடுப்பு (₹14 கோடி), வசதி மையம் (₹22 கோடி) போன்ற திட்டங்களுக்கும் வாரிய நிதி மடைமாற்றப்படுகிறது. மேலும், அனைத்து நல வாரியங்களின் ஊழியர் சம்பளம் உள்ளிட்ட அலுவலகச் செலவினங்களில் 80% கட்டுமான வாரியப் பணத்தில் இருந்துதான் அரசு செலவிடுகிறது. கடந்த 42வது வாரியக் கூட்டம் வரை விவாதிக்கப்பட்ட, தொழிலாளர்களுக்குப் பயன் தரக்கூடிய ஓய்வூதியம் ₹3000, பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம், திருமண உதவித்தொகை போன்ற முக்கியமான கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிடத் தயக்கம் காட்டிவரும் தமிழக அரசு, புதுச்சேரி மாநிலம் போல பண்டிகைக் கால போனஸ் கூட வழங்க மறுக்கிறது.  எனவே, கட்டுமானத் தொழிலாளர்களின் நலன்களுக்காக வசூலிக்கப்பட்ட நல வரியை, அவர்களின் சேமநலத்திற்கு மட்டுமே செலவிட வேண்டும் என்றும், வேறு பணிகளுக்கோ திட்டங்களுக்கோ மடைமாற்றம் செய்வதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் கோருகிறது. நல வாரியத்தைப் பாதுகாக்க, தொழிலாளர்கள் அனைவரும் போராட்டங்களுக்கு தயாராகுமாறு அறைகூவி அழைக்கிறோம்.