சென்னை,பிப்.11- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வெளி மாவட்டங்களில் பணிபுரியும் தொழி லாளர்கள் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு சிஐடியு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி கள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூ ராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 19 அன்று நடைபெறு வதையொட்டி தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளுக்கு அன்று பொதுவிடுமுறை விடப்படுவதாக 9.2.2022 அன்று அரசாணை வயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாநகராட்சிகள், நகராட்சி கள் மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் வாக்காளர்களில் ஒரு பகுதியினர் கிராமப்புற பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்னை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை உறுதிப்படுத்திடும் வகையில் வாக்குப்பதிவு நாளான பிப்ர வரி 19 அன்று சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்கிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.